டோக்கியோவில் நடந்துவரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து அசத்தி வருகின்றனர். தற்போதுவரை இந்தியா மொத்தம் 75 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 15 தங்கம், 25 வெள்ளி மற்றும் 35 வெண்கலம் அடங்கும்.
இன்று நடைபெற்ற குத்துச்சண்டை விளையாட்டுப்போட்டியில் லவ்லினா போர்கோஹெய்ன், பர்வீன் ஹூடா ஆகியோருக்குப் பிறகு அங்குஷ் பங்காலும் தங்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் இந்தியா குத்துச்சண்டையில் வெறும் 30 நிமிடங்களில் ஹாட்ரிக் தங்கங்களை வென்று சாதனையைப் பதிவு செய்தது. இதனிடையே, மல்யுத்தத்தில் சுஜீத் கல்கலும் தங்கப் பதக்கத்தை வென்று இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை உயர்த்தியுள்ளார்.
பதக்கப்பட்டியலை பொறுத்தவரையில் 100 பதங்களை இலக்காக கொண்டிருக்கும் இந்தியா 75 எண்ணிக்கையுடன் பட்டியலில் 5வது இடத்தில் நீடிக்கிறது. இதுவரை ஒரேயொரு முறை மட்டுமே இந்தியா 100 பதங்களை தொட்டிருக்கும் நிலையில், அடுத்தடுத்து வீரர்கள் நம்பிக்கையை அதிகரிக்கின்றனர்.
இந்தியா-சீனா ஹாக்கி மகளிர் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி நடந்துவருகிறது. இதில் பாதிநேர ஆட்டத்தில் இந்தியா நடப்பு சாம்பியனான சீனாவை விட 1-0 என லீட் எடுத்துள்ளது. ஒருவேளை இந்த இறுதிப்போட்டியில் இந்திய ஹாக்கி மகளிர் அணி வெற்றிபெற்றால் 44 ஆண்டுக்கு பிறகு தங்கம் வென்று வரலாறு படைக்கும்.
கடைசியாக இந்தியா மகளிர் ஹாக்கி தங்கப் பதக்கத்தை 1982-ல் ஒரே ஒரு முறை மட்டுமே வென்றுள்ளது. அதன்பிறகு இரண்டு முறை அப்பட்டத்தை மீண்டும் கைப்பற்றும் வாய்ப்பை நெருங்கியுள்ளது. 1998 மற்றும் 2018-ல் முறையே தென் கொரியா மற்றும் ஜப்பானிடம் தோல்வியடைந்து, இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இந்தசூழலில் இந்த இறுதிப் போட்டியில் சீனாவை வீழ்த்தி, அந்த நீண்ட காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவரும் என்ற நம்பிக்கையுடன் இந்தியா விளையாடுகிறது.
இறுதிப்போட்டியில் வெற்றிபெற்றால் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாகத் தகுதிபெற இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.