விளையாட்டு

தங்க வேட்டையாடிய இந்திய தடகள வீரர்கள் !

தங்க வேட்டையாடிய இந்திய தடகள வீரர்கள் !

webteam

அனல் பறக்கும் இறுதிகட்டத்தை எட்டியுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி மேலும் இரண்டு தங்கப்பதக்கங்களை நேற்று வென்றது.

வீரர்களில் கடும் போட்டிக்கிடையே நேற்று நடைப்பெற்ற ஆடவர் ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் ஜின்சன் ஜான்சன் தங்கம் வென்றார். கேரளாவைச் சேர்ந்தவரான ஜின்சன் ஜான்சன் பந்தய இலக்கை 3 நிமிடங்கள் 44.72 நொடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற மஞ்சித் சிங் இந்தப்போட்டியில் நான்காவது இடமே பிடித்தார்.

அதேபோல் மகளிர் 400 தொடோரட்டத்தில் வலிமை வாய்ந்த பஹ்ரைன் அணியை பின்னுக்குத்தள்ளி இந்திய மகளிர் முதலிடம் பிடித்தனர். பந்தய இலக்கை மூன்று நிமிடங்கள் 30.61 நொடிகளில் கடந்து இந்திய வீராங்கனைகள் தங்கப்பதக்கத்தை தமதாக்கினர். ஹிமா தாஸ், பூவம்மா, சரிதா பென், விஸ்மாயா அடங்கிய இந்திய அணி சாதித்தது.

ஆடவர் 400 மீட்டர் தொடரோட்டத்தில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. பந்தய இலக்கை 3 நிமிடங்கள் 1.85 நொடிகளில் கடந்து இரண்டாவது இடம் பிடித்தது. இந்தப்போட்டியில் கத்தார் அணி தங்கப்பதக்கம் வென்றது. அதேபோல் தமிழகத்தை சேர்ந்த ஆரோக்ய ராஜீவ், தருண் அய்யாசாமி ஆகியோர் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தவர்கள் ஆவர்.

மகளிர் ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டத்தில் பி.யு.சித்ரா மூன்றாவது இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார். மகளிர் வட்டு எறிதலில் சீமா பூனியா வெண்கலப்பதக்கம் வென்றார். 62.26 மீட்டர் தூரம் வீசிய அவர் மூன்றாவது இடம் பிடித்தார்.

ஆடவர் ஹாக்கியில் இந்தியாவுக்கு அதிர்ச்சி;-

இந்திய ஆடவர் ஹாக்கி அணி அரையிறுதியில் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தது. டைபிரேக்கர் வரை நீடித்த அரையிறுதியாட்டத்தில் மலேசிய அணியிடம் இந்திய அணி தோற்றது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 110 தங்கப்பதக்கங்களுக்கு மேல் வென்றுள்ள சீன அணி பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் வீற்றிருக்கிறது. ஜப்பான், தென்கொரியா, ‌இந்தோனேஷியா ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 13 தங்கம் உட்பட 59 பதக்கங்களை வென்றிருக்கும் இந்திய அணி பதக்கப்பட்டியலில் 8- ஆவது இடத்தில் இருக்கிறது.