ஆசிய கோப்பைக்கான ஹாக்கி போட்டியில், இந்திய அணி 16-0 என்ற கோல் கணக்கில் இந்தோனேசியாவை வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. "ஏ" பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற, இந்தோனேசியாவை 15-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்த வேண்டிய நிர்பந்தத்தில் களம் இறங்கியது.
இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர்கள் 16 கோல்களை அடித்து அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்தனர். சூப்பர் - 4 சுற்றுக்கு அடியெடுத்து வைத்த இந்திய அணி, உலகக் கோப்பைக்கு செல்லும் வாய்ப்பையும் உறுதி செய்தது. இதன் மூலம் ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. மேலும் உலக கோப்பைக்கான வாய்ப்பையும் பாகிஸ்தான் பறிகொடுத்தது.
இந்திய அணியை பொறுத்தவரை டிப்சன் டிர்கி அதிகபட்சமாக 5 கோல்களை அடித்து வெற்றிக்கு உதவினார். சுதேவ் பெலிமக்கா 3 கோல்களை அடித்து அசத்தினார். இந்திய அணியின் மூத்த வீரர் எஸ்.வி.சுனில், பவன் ராஜ்பார் மற்றும் தமிழக வீரர் கார்த்தி செல்வம் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.