விளையாட்டு

களத்தில் மோதலில் ஈடுபட்ட ஆசிப் அலி, ஃபரித் அகமதுவுக்கு அபராதம் விதித்தது ஐசிசி!

ச. முத்துகிருஷ்ணன்

ஆசியக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் களத்தில் மோதிக்கொண்டநிலையில், ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் சூப்பர் 4 சுற்றில், செப்டம்பர் 7 அன்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்ததை அடுத்து, முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.2 ஓவரில், 9 விக்கெட்டுகளை இழந்து போராடி 131 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் இந்தப் போட்டியில் நடந்த சம்பவம் ஒன்று சர்ச்சையை கிளப்பியது. ஆப்கான் வீரர் ஃபரீத் அகமது வீசிய பந்தில், பாகிஸ்தான் வெற்றிக்கு தனி ஆளாக நின்று போராடிய ஆசிஃப் அலி சிக்ஸர் அடித்துவிட்டு அவரை சீண்டினார்.

இதனைத் தொடர்ந்து ஃபரீத் அகமது வீசிய பந்தில், மீண்டும் சிக்ஸர் அடிக்க முயன்று ஆசிஃப் அலி அவுட்டானதால், ஃபரீத் அகமது துள்ளிக்குதித்தார். இதனால் கடுப்பான பாகிஸ்தான் வீரர் ஆசிஃப் அலி பேட்டை தூக்கி அவரை அடிக்கச் சென்றார். இதனால் ஆப்கான் வீரர் ஃபரீத் அகமதுவும் கோபமாக கத்த அங்கு மோசமான சூழ்நிலை நிலவியது.

இதையடுத்து நடுவர்கள் இருநாட்டு வீரர்களையும் சமாதனப்படுத்தி அனுப்பி வைத்தனர். மேலும் பாகிஸ்தான் வெற்றியைப் பொறுத்துகொள்ள முடியாத ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் மைதானத்தில் இருந்த இருக்கைகள் மற்றும் பொருள்களை தூக்கி எறிந்து சேதப்படுத்தினர். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக ஐசிசி தரப்பிலும் விசாரணை நடைபெற்றது.

இருவரும் ஐசிசி நடத்தை விதிகளை நிலை 1 ஐ மீறியது உறுதி செய்யப்பட்டது. ஆசிப் அலி ஐசிசி நடத்தை விதி 2.6 “சர்வதேச போட்டியின் போது ஆபாசமான, புண்படுத்தும் அல்லது அவமதிக்கும் சைகையைப் பயன்படுத்துவது” மீறியதும், ஃபரீத் ஐசிசி நடத்தை விதி 2.1.12 “ஒரு சர்வதேச போட்டியின் போது ஒரு வீரர், வீரர் ஆதரவு பணியாளர், நடுவர், போட்டி நடுவர் அல்லது வேறு எந்த நபருடனும் (பார்வையாளர் உட்பட) பொருத்தமற்ற உடல் தொடர்பு” மீறியதும் உறுதி செய்யப்பட்டது.

ஆசிப் அலி மற்றும் ஃபரித் இருவரும் தங்கள் தவறுகளை ஒப்புக்கொண்டு போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் முன்மொழியப்பட்ட தடைகளை ஏற்றுக்கொண்டனர். அதன்படி இருவரும் போட்டிக்கான கட்டணத்தில் 25% அபராதமாக விதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. மேலும் இரண்டு வீரர்களுக்கும் ஒரு டிமெரிட் புள்ளி சேர்க்கப்பட்டதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது.