விளையாட்டு

இந்தியாவின் அசத்தல் பந்துவீச்சு - 162 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான்

இந்தியாவின் அசத்தல் பந்துவீச்சு - 162 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான்

webteam

ஆசியக் கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் 162 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

ஆசியக் கோப்பை 2018 கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் இந்திய அணி ஹாங்காங் அணியை வென்றது. இந்நிலையில் இன்றைய போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான இமாம் உல் அக் 2 (7) மற்றும் ஃபகார் 0 (9) ரன்களில் வெளியேறினர். இதையடுத்து வந்த பாபர் அசாம் மற்றும் சொயப் மாலிக் ஆகியோர் நிலைத்து விளையாடி அணியின் ரன்களை உயர்த்தினர். பின்னர் அவர்களும் 47 (62), 43 (67) என அரைசதம் அடிக்காமல் அவுட் ஆகினர்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால், அந்த அணி 165 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதற்கிடையே ஃபஹீம் அஷரஃப் 21 ரன்கள் எடுத்தார். முகமது அமீர் 18 ரன்களில் ஆட்டமிழக்காமல் இறுதி வரை களத்தில் இருந்தார். 43.1 ஓவர்களில் 162 ரன்களுக்கு பாகிஸ்தான் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் புவனேஸ் குமார் மற்றும் கேதர் ஜாதவ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பும்ரா 2 விக்கெட்டுகளை சாய்த்தார். இதையடுத்து 163 என்ற எளிமையான இலக்கை எதிர்த்து இந்தியா விளையாடவுள்ளது.