விளையாட்டு

238 ரன்கள் இலக்கு : எளிதில் வெல்லுமா இந்தியா ?

238 ரன்கள் இலக்கு : எளிதில் வெல்லுமா இந்தியா ?

webteam

இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி 237 ரன்கள் சேர்த்துள்ளது.

ஆசிய கோப்பை 2018 கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய நாடுகள் பங்கேற்றன. 6 அணிகளில் 4 அணிகள் மட்டும் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெற்றதால் இலங்கை மற்றும் ஹாங்காங் ஆகிய இரு அணிகள் வெளியேறிவிட்டன. இன்றைய போட்டிகளில் இந்தியா-பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ்-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன.

இதில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரரான இமாம் உல்-அக் 10 (20) ரன்களில் வெளியேறினார். ஃபாகர் ஜமான் 31 (44) மற்றும் பாபர் அசாம் 9 (25) ரன்களில் வெளியேறினர். இதனால் பாகிஸ்தான் அணியின் ரன் வேகம் குறைந்தது. பின்னர் வந்த அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் மற்று சொயப் மாலிக் ஆகியோர் நிலைத்து விளையாடி, அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

44 (66) ரன்கள் எடுத்த நிலையில், குல்தீப் யாதவ் வீசிய பந்தில் சர்ஃப்ராஸ் கேட்ச் அவுட் ஆனார். பின்னர் சொயப் மாலிக் 78 (90) ரன்களில் ஆட்டமிழந்தார். இதற்கிடையே வந்த ஆசிஃப் அலி 30 (21) ரன்கள் எடுத்து சற்று அதிரடியை காட்டினார். 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு பாகிஸ்தான் 237 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என இந்தியா களமிறங்கவுள்ளது. இந்திய அணி சார்பில் பும்ரா, சாஹல் மற்றும் குல்தீப் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.