விளையாட்டு

“கவலைப்படாதே சகோதரா..” - ஹாங்காங் ட்ரெஸ்ஸிங் ரூமில் இந்தியா உருக்கம்

“கவலைப்படாதே சகோதரா..” - ஹாங்காங் ட்ரெஸ்ஸிங் ரூமில் இந்தியா உருக்கம்

webteam

ஹாங்காங் ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு சென்ற இந்திய வீரர்கள், அங்கிருந்த ஹாங்காங் வீரர்களுக்கு கிரிக்கெட்டின் தந்திரங்களை சொல்லிக்கொடுத்தனர்.

ஆசியக் கோப்பை 2018 கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா-ஹாங்காங் அணிகள் விளையாடியன. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ரோகித் ஷர்மா 23 (22) ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஷிகர் தவான் மற்றும் அம்பதி ராயுடு ஜோடி நிலைத்து விளையாடியது. 60 (70) எடுத்திருந்த நிலையில், நவாஷ் வீசிய பந்தில் ராயுடு கேட்ச் அவுட் ஆனார். அதன்பின்னர் வந்த வீரர்களில் தினேஷ் கார்த்திக் 33 (38), கேதர் ஜாதவ் 28 (27) ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 285 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகளை இழந்தது.

இதையடுத்து 286 எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய ஹாங்காங் அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 174 ரன்கள் வரை ஒரு விக்கெட்டை கூட பறிகொடுக்காமல் அந்த அணி இந்தியாவிற்கு அதிர்ச்சியளித்தது. இந்தியாவின் தோல்வி உறுதி என்ற நிலைக்கு ரசிகர்கள் வந்துவிட்டர். அப்போது 174 ரன்னில் முதல் விக்கெட் விழுந்தது. அதைத்தொடர்ந்து 175, 191, 199, 227, 228, 240, 256 ஆகிய ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன. நிலைகுலைந்த ஹாங்காங் அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே ஹாங்காங் அணி பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது. இந்நிலையில் இந்தியாவிடமும் போராடித்தோற்று ஆசியக் கோப்பையிலிருந்தே வெளியேறியுள்ளது.

இந்நிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாங்காங் அணியை ஊக்குவிக்கும் வகையில் இந்திய அணியின் வீரர்கள், ஹாங்காங் ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு சென்றனர். அங்கு சென்ற திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக ஹாங்காங் வீரர்களை பாராட்டினர். அத்துடன் கிரிக்கெட் விளையாட்டில் ஹாங்காங் அணிக்கு பல அறிவுரைகளையும் வழங்கினர். இந்தச் சம்பவத்தால் ஹாங்காங் வீரர்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.