விளையாட்டு

ஆசியக் கோப்பை: ‘நாங்கள் தயார்’ என சவால் விடும் ஹாங்காங்... இந்தியாவின் அதிரடி தொடருமா?

ஆசியக் கோப்பை: ‘நாங்கள் தயார்’ என சவால் விடும் ஹாங்காங்... இந்தியாவின் அதிரடி தொடருமா?

webteam

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் ஹாங்காங் உடன் மோத உள்ளது.

ஆசியக் கோப்பை கடந்த 27 ஆம் தேதி தொடங்கிய நிலையில் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. B பிரிவில் இருக்கும் ஆப்கான் அணி இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் அபாரமாக விளையாடி 7 விக்கெட்டுகள் மற்றும் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்நிலையில் ஏ பிரிவில் இருக்கும் இந்திய அணி ஞாயிற்றுக் கிழமை நடந்த தனது முதல் ஆட்டத்தில் சமபலத்தில் இருக்கும் தனது பரம எதிரியான பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது.

இந்திய அணி எதிர்கொள்ளும் இரண்டாது ஆட்டம், இளம் வீரர்களை கொண்ட ஹாங்காங் அணியை இன்று எதிர்கொண்டு விளையாட உள்ளது. இந்நிலையில் இந்தியாவை எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் என்று ஹாங்காங் அணியின் கேப்டனான ஆல்ரவுண்டர் நிஜாகத் கான் கூறியுள்ளார்.

ஆசியக் கோப்பையின் தகுதிச் சுற்று போட்டிகளில் எதிர்கொண்ட அணிகளுக்கு இடையேயான அனைத்துப்போட்டிகளையும் வென்று ஒரு தோல்வி கூட இல்லாமல் ஆசிய கோப்பைக்குள் நுழைந்துள்ளது ஹாங்காங் அணி. மேலும் ஹாங்காங் அணி இந்திய அணியை சோதிக்கும் விதத்தில் விளையாடும் முனைப்பில் உள்ளது.

இந்நிலையில் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற இருக்கும் இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று ஏ பிரிவில் முதல் அணியாக அடுத்த சுற்றை உறுதிசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.