விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட்: நாளை வீரர்கள் தேர்வு, புதியவர்களுக்கு வாய்ப்பு!

ஆசிய கோப்பை கிரிக்கெட்: நாளை வீரர்கள் தேர்வு, புதியவர்களுக்கு வாய்ப்பு!

webteam

ஆசிய கோப்பை கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தேர்வு நாளை நடக்கிறது. இதில் புதிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரி கிறது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி 1984-ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நடந்த 13 போட்டிகளில் இந்திய அணி 6 முறையும், இலங்கை 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. இந்நிலையில் 14-வது போட்டிக்கான அட்டவணையைச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கும் இந்தத் தொடரின் முதல் போட்டி செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்குகிறது. இறுதிப்போட்டி 28-ம் தேதி நடக்கிறது. மொத்தம் 13 போட்டிகள் நடக்கின்றன.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி என 6 அணிகள் இதில் பங்கேற்கிறது. தகுதிச்சுற்று ஆட்டங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஏமன், நேபாளம், மலேசியா, ஹாங்காங் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி ஏ பிரிவில் இடம் பெறும். 

முதல் போட்டியில் இலங்கை அணியும், பங்களாதேஷும் மோது கின்றன. செப்டம்பர் 19-ம் தேதி இந்திய அணியை எதிர்கொள்கிறது பாகிஸ்தான். அதற்கு முந்தைய நாள் தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் இந்திய அணி மோதுகிறது. மறுநாளே பாகிஸ்தான் அணியுடன் இந்திய மோதுவது போல போட்டி அட்டவணை அமைக்கப்பட்டிருப்பதால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருந்தும் அட்டவணை மாற்றப்படவில்லை.

இந்நிலையில் ஆசிய கோப்பைக்கான வீரர்கள் தேர்வு மும்பையில் நாளை நடக்கிறது. தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான குழு, மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய அலுவலகத்தில் கூடி வீரர்களை தேர்வு செய்கிறது. இதில் இங்கிலாந்து தொடரில் இடம்பெற்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வளித்துவிட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.

 ’யோ யோ’ தேர்வில் வெற்றி பெறாத காரணத்தால் இங்கிலாந்து தொடரில் இடம் பெறாத அம்பத்தி ராயுடு, இளம் வீரர்களான பிருத்விஷா, மயங்க் அகர்வால், விஹாரி உட்பட சிலருக்கு வாய்ப்பளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.