விளையாட்டு

அஸ்வின் திடீர் காயம்: கவலையில் இந்திய அணி!

webteam

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியில் இடம் பெற்றுள்ள சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் காயம் அடைந்துள்ளதால் பயிற்சி ஆட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்தியாவும், ஒரு நாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய கிரிக்கெட் அணி தீவிரப் பயிற்சியை மேற்கொண்டுள்ளது. இதில் ஒரு கட்டமாக, எஸ்ஸெக்ஸ் கவுண்டி அணியுடனான பயிற்சிப் போட்டியில் பங்கேற்றுள்ளது. 

இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 395 ரன்கள் எடுத்தது. முரளி விஜய், விராத் கோலி, கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் அரை சதம் அடித்தனர். பின்னர் ஆடிய எஸ்ஸெக்ஸ் அணி, 5 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்துள்ளது. அங்கீகாரமற்ற போட்டி என்பதால் இதில் இந்திய அணியின் அனைத்து வீரர்களும் பங்கேற்க ஒப்புக்கொள்ளப்பட்டது. 

இந்நிலையில் இந்தப் போட்டியில் அஸ்வின் பங்கேற்வில்லை. இதுபற்றி விசாரித்தபோது, வலை பயிற்சியின் போது அஸ்வினுக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது தெரிய வந்தது. ’அவரது காயம் சிறிய அளவிலானதுதான். பெரிதாகிவிடக் கூடாது என்பதற்காக பயிற்சி ஆட்டத்தில் அவர் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் ஈடுபடவில்லை. முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் அவர் நலமாகிவிடுவார்’ என்று தெரிவித்தனர்.

ஏற்கனவே பும்ரா, புவனேஷ்வர்குமார், சஹா என வீரர்களின் காயப்பிரச்னை காரணமாக இந்திய அணி, கவலையில் இருக்கும்போது, அஸ்வினின் காயம் அணிக்கு மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.