பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போடியில் முன்னாள் கிரிக்கெட் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஸ்லே பர்டி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
ஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான, பிரெஞ்சு ஓபன் போட்டிகள், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வருகின்றன. உலகில் 8ம் நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஸ்லே பர்டி, செக் குடியரசின் மார்கெட்டா வாண்ட்ரொவ்சோவாவை இறுதிப் போட்டியில் எதிர்கொண்டார். அதில் ஆஸ்திரேலியாவின் பர்ட் 6-1. 6-3 என நேர் செட்களில் வெற்றி பெற்று தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை தட்டிச் சென்றார்.
இதன்மூலம் 1973ம் ஆண்டுக்கு பிறகு பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வெல்லும் முதல் ஆஸ்திரேலிய பெண் என்ற பெருமையை அவர் பெற்றார். மேலும் இந்த வெற்றியின் மூலம் அவர் உலகின் 2ம் நிலை வீராங்கனையாக உயர்ந்துள்ளார். சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற ஆஸ்திரேலியாவின் ஆஸ்லே பர்டி கடந்த 2015, 2016ம் ஆண்டுகளில் பிக் பேஷ் லீக் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் அரை இறுதி ஆட்டத்தில் முன்னணி வீரர் ஜோகோவிச் போராடி தோல்வியடைந்தார். ஆஸ்திரியாவின் டோமினிக் தீமை எதிர்கொண்ட ஜோகோவிச், 2-6, 6-3, 5-7, 7-5, 5-7 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் நடப்புச் சாம்பியனான ரஃபேல் நடாலை, டோமினிக் தீம் எதிர்கொள்கிறார்.