சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன், இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோலி, தவான் ஆகியோர்களுக்கு பந்துவீசி பயிற்சி மேற்கொண்டார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட வந்துள்ளது. இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி மும்பையில் நாளை நடக்கிறது. இதற்காக இரண்டு அணிகளும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. நேற்று நடந்த வலைப்பயிற்சியில், இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுனும் கலந்துகொண்டார். அவர், முதலில் ஷிகர் தவானுக்கும் பிறகு கேப்டன் விராத் கோலிக்கும் பந்துவீசினார். பிறகு ரஹானே, கேதர் ஜாதவ் ஆகியோருக்கும் பந்துவீசினார்.
18 வயதான அர்ஜூனின் பந்துவீச்சை, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோர் பார்வையிட்டனர்.
அர்ஜுன், 19 வயதுக்குட்பட்டோருக்கான மும்பை அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.