விளையாட்டு

அரியலூர்: ஆசிய சதுரங்க போட்டியில் சாதனை - அரசுப்பள்ளி மாணவிக்கு உற்சாக வரவேற்பு

webteam

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 7 வயது சிறுமி ஆசிய சதுரங்க போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று தங்க பதக்கம் வென்று உலக சதுரங்க போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இலங்கை - வாஸ்கதுவாவில் கடந்த 03 முதல் 11 ஆம் தேதி வரை 16-வது ஆசிய சதுரங்க போட்டி நடைபெற்றது. இதில், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவி சதுரங்க வீராங்கனை சர்வாணிகா (7) இந்தியா சார்பில் கலந்து கொண்டார்.

இந்நிலையில், 7 வயதுக்கு உட்பட்டோருக்கான சதுரங்க போட்டியின் முதல் பிரிவில்  (Rapid under7) நடைபெற்ற 7 சுற்றுகளில் 7 வெற்றிகளை பெற்றார். இதையடுத்து நடைபெற்ற இரண்டாம் பிரிவில் (blitz under7) நடைபெற்ற 7 சுற்றுகளில் 7 வெற்றிகளை பெற்றார். இதேபோல், மூன்றாம் பிரிவில் (standard) நடைபெற்ற 9 சுற்றுகளில் 9 வெற்றிகள் பெற்றார்.

இதன் மூலம் மூன்று பிரிவுகளில் நடைபெற்ற 23 ஆட்டங்களிலும் முழுமையாக வெற்றிகளை பெற்று, ஆசிய சதுரங்க போட்டியில் புதிய சாதனை படைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். மூன்று பிரிவுகளில் தங்கப் பதக்கங்கள் மற்றும் அணிக்கான பதக்கங்கள் உட்பட மொத்தம் 6 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். மூன்று கோப்பைகள் மற்றும் அணிக்கான கோப்பைகள் உட்பட மொத்தம் 5 கோப்பைகளை வென்றுள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயின்று ஆசிய சதுரங்க போட்டியில் புதிய சாதனை படைத்துள்ள 7வயது மாணவி சர்வாணிக்கா சென்னையில் இருந்து குருவாயூர் ரயில் மூலம் அரியலூர் வந்தனர். அவருக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கல்வித் துறையினர் மற்றும் பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.