உலகக்கோப்பையில் இன்று 4 முக்கிய ஆட்டங்கள் நடைபெறயுள்ள நிலையில் நைஜீரியா அணியுடன் அர்ஜென்டினா அணி பலப்பரீட்சை.
ரஷ்யாவில் களைகட்டி வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று 4 முக்கிய ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. சோச்சியில் நடைபெறும் சி பிரிவு போட்டியில், ஆஸ்திரேலிய அணி நாக்அவுட் சுற்றுக்கான வாய்ப்பை எதிர்நோக்கி பெரு அணியை எதிர்கொள்கிறது. சி பிரிவில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் 4 புள்ளிகளைப் பெற்றுள்ள டென்மார்க் அணி, ஏற்கனவே அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துவிட்ட பிரான்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
டி பிரிவில் நடைபெறும் முக்கிய ஆட்டத்தில் நைஜீரியா மற்றும் அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நள்ளிரவு 11.30 மணிக்குத் தொடங்கும் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். டி பிரிவில் நடைபெறும் மற்றொரு போட்டியில் ஐஸ்லாந்து மற்றும் குரோஷியா அணிகள் விளையாடுகின்றன. முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ள குரோஷியா அணி, ஏற்கனவே நாக்அவுட் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துவிட்டது.
ஆர்ப்பரிக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஆர்ஜென்டினா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா என்ற எதிர்பார்ப்பு பன்னாட்டு ரசிகர்களிடம் பரவிக்கிடக்கிறது. இந்த முறை ஆர்ஜென்டினா அணிக்கு சவாலாக விளங்குகிறது நைஜீரியா. நட்சத்திர நாயகன் மெஸ்ஸி உள்ளிட்ட ஒட்டுமொத்த அர்ஜென்டினா அணிக்கும் சவாலாக இருக்கிறார் நைஜீரியாவின் நம்பிக்கை நாயகன் அஹமத் மூசா.