விளையாட்டு

ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை: ஜெர்மனியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது அர்ஜென்டினா

JustinDurai
ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் ஜெர்மனியை வீழ்த்தி அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
புவனேஷ்வரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த ஜெர்மனி அணிக்கு தொடக்கம் முதலே அர்ஜென்டினா நெருக்கடி கொடுத்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முடிவில் 4 க்கு 2 என்ற கோல்கள் கணக்கில் அர்ஜென்டினா அசத்தல் வெற்றியைப் பதிவு செய்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.
முன்னதாக வெண்கலப் பதக்கத்திற்கு நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. போட்டியில் தொடக்கம் முதல் அதிரடி காட்டிய பிரான்ஸ் அணி ஒரு புறம் இந்தியாவின் கோல் முயற்சிகளை முறியடித்துக் கொண்டே இருந்தது. மறுபுறம் அந்த அணியின் கேப்டன் டிமோத்தி க்ளெமெண்ட் ஹாட்ரிக் கோல்களை அடித்தார். இறுதியில் இந்திய அணி 1- 3 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்தையும் இழந்தது.