விளையாட்டு

“பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்ததை நகைச்சுவையாக கருதிவிட்டார்கள்” - ஃபிளின்டாப்

webteam

இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பதவிக்கு தான் அளித்த விண்ணப்பத்தை கிரிக்கெட் வாரியம் நகைச்சுவையாக எடுத்து கொண்டது என்று முன்னாள் வீரர் ஆண்ட்ரூ  ஃபிளின்டாப் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல்ரவுண்டர்களுள் ஒருவராக திகழ்ந்தவர் ஆண்ட்ரூ ஃபிளின்டாப். இவர் இங்கிலாந்து அணிக்காக 141 ஒருநாள் போட்டிகள் மற்றும் 79 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர் ஒருநாள் போட்டியில் 3394 ரன்களும், டெஸ்ட் போட்டியில் 3845 ரன்களும் அடித்துள்ளார். அத்துடன் ஒருநாள் போட்டியில் 169 விக்கெட்டுகளும், டெஸ்ட் போட்டிகளில் 226 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். குறிப்பாக  இவர் 2005ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் சிறப்பாக செயல்பட்டார். இதனால் இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. 2010ஆம் ஆண்டு இவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். எனினும் 2014ஆம் ஆண்டில் டி20 போட்டிகளில் களமிறங்கினார்.

இந்நிலையில் இவர் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், “நான் கடந்த 2014ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பதவிக்கு மின்னஞசல் அனுப்பினேன். இந்த மின்னஞசலுக்கு நீண்ட நாட்கள் ஆகியும் பதில் வரவில்லை. இதனைத் தொடர்ந்து நான் இந்த மின்னஞசல் குறித்து விசாரிக்க ஆரம்பித்தேன். அப்போது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் எனது மின்னஞசலை நகைச்சுவையாக கருதி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று தெரியவந்தது. 

பயிற்சியாளர் பதவி என்பது எனது கனவு ஆசை. அதிலும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவி எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஆகவே விரைவில் ஒருநாள் நான் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இருப்பேன்” எனத் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தற்போதைய பயிற்சியாளர் ட்ரவர் பெயிலீஸின் பதவிக்காலம் இந்த ஆஷஸ் தொடருடன் முடிய உள்ளது குறிப்பிடத்தக்கது.