விளையாட்டு

"என் மனைவியிடமிருந்து கற்றுக்கொண்டது இதைத்தான் " மனம் திறந்த விராட் கோலி !

"என் மனைவியிடமிருந்து கற்றுக்கொண்டது இதைத்தான் " மனம் திறந்த விராட் கோலி !

jagadeesh

தன் மனைவி அனுஷ்கா சர்மாவிடமிருந்து பொறுமையை கற்றுக்கொண்டதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தாண்டு நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் போட்டிகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. எனவே இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். ஆனாலும் சமூக வலைத்தளத்தில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கின்றனர் இந்திய கிரிக்கெட் வீரர்கள். தாங்கள் ஊரடங்கு காலத்தில் வீட்டில் செய்யும் வேலைகளை வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர்.

மேலும் கொரோனா குறித்து விழிப்புணர்வு பதிவுகளையும் வெளியிட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக கோலி - அனுஷ்கா தம்பதியினர் ரூ.8 கோடிக்கு நிதியுதவியும் அளித்துள்ளனர். மேலும் கோலி சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களிடையே நேரடியாக உரையாடியும் வருகிறார். அப்படிதான் ஆன் லைன் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியொன்றில் மாணவர்களுடன் நேரடியாக உரையாடினார் விராட் கோலி. அப்போது மாணவர்கள் பலரும் பலவிதமான கேள்விகளை முன் வைத்தனர்.

அப்போது மாணவர் ஒருவர் "உங்கள் மனைவியிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்டது என்ன" என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு பதிலளித்த கோலி "என் மனசாட்சியின்படி அனுஷ்காவிடமிருந்து நான் கற்றுக்கொண்டது பொறுமையைதான். அவரை சந்திப்பதற்கு முன்பு வரை நான் அவ்வளவு பொறுமைசாலி எல்லாம் இல்லை. அதேபோல சில சங்கடமான அல்லது நெருக்கடியான தருணங்களில் அவரின் ஆளுமை திறனும் என்னை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இவையெல்லாம் தான் அனுஷ்காவிடம் இருந்து நான் கற்றுக்கொண்டவை" என தெரிவித்தார்.