விளையாட்டு

ஆசிய விளையாட்டில் இந்தியா புதிய சாதனை

webteam

இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர் அமித் பாங்கல் தங்கப் பதக்கம் வென்றார்.

ஆடவர் 49 கிலோ எடைப்பிரிவில், தங்கப் பதக்கத்திற்கான இறுதிப் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான உஸ்பெகிஸ்தான் வீரர் ஹசன்பாய் டுஸ்மடோவை எதிர்த்து அமித் பாங்கல் களமிறங்கினார். போட்டியின் தொடக்கம் முதலே இருவரும் சமபலத்துடன் விளையாடி புள்ளிகள் சேர்த்தனர். விறுவிறுப்பு நிறைந்த இந்தப் போட்டியில் 3-2 என்ற புள்ளிகள் கணக்கில் அமித் வெற்றியை வசமாக்கினார்.

இதேபோல் ஆசிய விளையாட்டில் புதிதாக சேர்க்கப்பட்ட பிரிட்ஜ் எனப்படும் சீட்டாட்டப் போட்டியில், இந்தியாவின் பிரனாப் பர்தன், சிப்னாத் சர்கார் இணை தங்கம் வென்று அசத்தியது. இது‌ ஆசிய விளையாட்டில் இந்தியாவின் 15-ஆவது தங்கப் பதக்கமாக அமைந்தது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், 2010ஆம் ஆண்டில் 65 பதக்கங்களை வென்றதே இந்தியாவின் சாதனையாக இருந்தது. தற்போது அதைவிட கூடுதல் பதக்கங்களை வென்று இந்தியா தனது முந்தைய சாதனையை முறிடியத்துள்ளது.