காயம் காரணமாக, இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இருந்து பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஆமிர் விலகியுள்ளார்.
இலங்கை- பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்துவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை வென்றது. 2-வது டெஸ்ட் துபாயில் இப்போது நடந்துவருகிறது. இதையடுத்து ஒரு நாள் போட்டிகளில் இரு அணிகளும் மோத உள்ளன. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஆமிர் காயம் காரணமாக ஒரு நாள் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
‘இப்போது நடக்கும் டெஸ்ட் போட்டியில் முகமது ஆமிர் பந்துவீசினார். 17 வது ஓவரில் பந்துவீசும் போது காயம் காரணமாக, பாதியிலேயே திரும்பினார். இடது குதிகாலில் காயம் காரணமாக வலியால் அவதிப்பட்டார். இரண்டாவது நாள் பீல்டுக்கு வந்த அவர், மூன்று ஓவர்கள் மட்டுமே பந்துவீசினார். பின்னர் வலி காரணமாக திரும்பினார். அவருக்கு ஸ்கேன் எடுத்துப் பார்க்கப்பட்டது. இதையடுத்து அவர் இரண்டு மூன்று வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளதால், அவர் ஒரு நாள் போட்டிகளில் விளையாட மாட்டார்’ என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.