விளையாட்டு

“ராயுடு அல்லது ஷ்ரேயஸ் ஐயரை 2019 உலகக் கோப்பை அணியில் சேர்த்திருக்க வேண்டும்” ரவி சாஸ்திரி

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இங்கிலாந்தில் நடைபெற்ற 2019 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வில் தனக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்துள்ளார். டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை நிறுவனத்திற்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். 

“உலகக் கோப்பை தொடருக்கு மூன்று விக்கெட் கீப்பர்கள் அடங்கிய அணியை தேர்வு செய்ததில் எனக்கு உடன்பாடில்லை. அம்பத்தி ராயுடு இல்லையென்றால் ஷ்ரேயஸ் ஐயர் என இந்த இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம். தோனி, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் என மூவரையும் ஒரே அணியில் வைத்திருப்பதில் என்ன லாஜிக் உள்ளது என்பது எனக்கு புரியவில்லை. 

அணி தேர்வை பொறுத்தவரையில் என்னிடம் கருத்து கேட்டாலோ அல்லது பொதுவான விவாதம் நடந்தால் மட்டுமே நான் எனது கருத்தை தெரிவிப்பேன். மற்றபடி தேர்வுக் குழுவின் பணியில் ஒருபோதும் நான் குறுக்கிட்டது கிடையாது. அதனால் தான் அப்போது நடைபெற்ற அணி தேர்வில் நான் எதையும் சொல்லவில்லை” என தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணி 2019 உலகக் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருப்பினும் நியூசிலாந்து அணியிடம் அரையிறுதி போட்டியில் தோல்வியை தழுவி வெளியேறியது. அந்த அரையிறுதி போட்டிதான் மகேந்திர சிங் தோனி கடைசியாக விளையாடிய சர்வதேச கிரிக்கெட் போட்டியாகும்.