விளையாட்டு

வானவேடிக்கை காட்டிய அம்பத்தி ராயுடு - 218 ரன்கள் குவித்த சென்னை அணி

வானவேடிக்கை காட்டிய அம்பத்தி ராயுடு - 218 ரன்கள் குவித்த சென்னை அணி

rajakannan

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் இன்றைய ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இண்டியன்ஸ் அணியும், 3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸும் விளையாடி வருகின்றன.

ஐபிஎல்லின் எல் கிளாசிக்கோ என்றழைக்கப்படும் இப்போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச தீர்மானித்தார்.

மிரட்டிய மொயின் அலி - டூப்ளசிஸ் ஜோடி

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில் தொடக்க வீரர்களாக டூப்ளசிஸ், கெய்க்வாட் களமிறங்கினர். கடந்த சில போட்டிகளில் அசத்தலாக விளையாடிய கெய்க்வாட் 4 ரன்னில் ஏமாற்றினார். பின்னர் டூப்ளசிஸ் உடன் ஜோடி சேர்ந்த மொயின் அலி சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசினார். இதனால் சென்னை அணியின் ரன் வேகமாக உயர்ந்தது. மொயின் அலி 33 பந்துகளில் அரை சதம் அடித்தார். டூப்ளசிஸும் தன் பங்கிற்கு சிக்ஸர்களை பறக்கவிட்டார். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் சென்னை அணி 10.1 ஓவரில் 100 ரன்னை எட்டியது.

அடுத்தடுத்து சரிந்த 3 விக்கெட்

சிறப்பாக விளையாடிய மொயின் அலி 36 பந்துகளில் 5 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் குவித்து பும்ரா பந்துவீச்சில் கீப்பர் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். மொயின் அலி சென்ற வேகத்திலேயே 28 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த நிலையில் டூப்ளசிஸ் பொல்லார்டு பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பொல்லார்டு வீசிய அடுத்த பந்திலேயே தன்னுடைய 200 ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடிய சுரேஷ் ரெய்னா 2 ரன்னில் நடையக் கட்டினார். இதனால் அடுத்தடுத்த ஓவர்களில் மூன்று விக்கெட் சரிந்தன.

இந்த நேரத்தில்தான் அம்பத்தி ராயுடுவும், ஜடேஜாவும் ஜோடி சேர்ந்தனர். ஜடேஜா அடக்கி வாசிக்க ராயுடு வான வேடிக்கை காட்டினார். மும்பை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிக்ஸர்களாக பறக்கவிட்டார். இதனால் சென்னை அணியின் ஸ்கோர் மளமளவென எகிறியது. அம்பத்தி ராயுடுவும் வெறும் 20 பந்துகளில் அரைசதம் விளாசினார். இந்த முறை ஜடேஜாவுக்கு பந்து சரியாக மீட் ஆகவில்லை. அதனால் அவர் ராயுடுவிற்கு ஒத்துழைப்பு அளித்தார்.

மும்பை பந்துவீச்சை பந்தம் பார்த்த ராயுடு

அரைசதம் கடந்த பிறகும் அம்பத்தி ராயுடு தன்னுடைய வானவேடிக்கையை தொடர்ந்தார். இதனால் 18.5 ஓவர்களில் சென்னை அணி 200 ரன்களை எட்டியது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது. அம்பத்தி ராயுடு வெறும் 27 பந்துகளில் 72 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். இதில் 7 சிக்ஸர், 4 பவுண்டரி அடங்கும். ஜடேஜாவும் 22 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மும்பை அணி தரப்பில் சிறந்த பந்துவீச்சாளரான பும்ரா 4 ஓவர்களில் 56 ரன்கள் வாரி வழங்கினார். குல்கர்னி 48 ரன்கள், ட்ரெண்ட் போல்ட் 42 ரன்கள் எடுத்தனர். க்ரென் போல்ட் மட்டும் இரண்டு ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட் சாய்த்தார்.