தோனியை சார்ந்துதான் நான் இருந்தேனா என்பதற்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது என்று இந்திய கிரிக்கெட் அணியின் சுழற் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் காட்டமாக கூறியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பின்பு சர்வதேசப் போட்டிகளில் ஏதும் தோனி பங்கேற்கவில்லை. இதனையடுத்து அவர் விரைவில் ஓய்வை அறிவிப்பார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளில் தோனியை பார்ப்பதற்கு ஆவலாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக அதுவும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தோனி இல்லாததால் சர்வதேசப் போட்டிகளில் குல்தீப் யாதவ் சரியாக பந்துவீசவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து கூறப்படுகிறது. இது குறித்து "டைம்ஸ் ஆஃப் இந்தியா" நாளிதழ்க்கு அளித்த பேட்டியில் குல்தீப் யாதவ் " தோனி உலகக் கோப்பைக்குப் பின்னர் விளையாடவில்லை என்பதற்காக, அதை சம்பந்தப்படுத்தி யாருக்கும் எதையும் நான் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவரை சார்ந்து இருந்தேனா என்பதற்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. நான் என் ஆட்டத்தை மேம்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு. அதற்கு ஏற்றபடி விளையாட நினைப்பேன்" என்றார்.
மேலும் தொடர்ந்த குல்தீப் " தோனி இருந்தால் அது எப்போதும் சிறப்பான விஷயம்தான். என்னை அவர் சரியாக வழி நடத்துவார். ஏன் என்றால் ஒரு விக்கெட் கீப்பரால்தான், பவுலர் எப்படி பந்து வீசுகிறார் என்பதை சரியாக கணிக்க முடியும். தோனிக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. ஒரு பேட்ஸ்மேன் எப்படி விளையாடுவார் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அந்த அனுபவம் அதிகம் கை கொடுத்துள்ளது. இது எல்லாமே ஒரு குழு முயற்சிதான்" என்று முடித்தார்.