இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் அடுத்த டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து அடுத்த போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரும், சீனியர் வீரருமான இரு அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
33 வயதான குல் 160 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12, 254 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 44.88 ஆகும். அதில், 32 சதங்களும், 56 அரை சதங்களும் அடங்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் குக் 6வது இடத்தில் உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரை குக் ஒரு கிளாசிக் வீரராகவே திகழ்ந்தார். இளம் வீரராக 6000, 7000, 8000, 9000, 10,000, 11,000, மற்றும் 12,000 ரன்களை சேர்த்தவர் என்ற பெருமை குக்கிற்கு உண்டு.
இந்த ஆண்டில் மொத்தம் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள குக் வெறும் 18.92 ரன் ரேட் மட்டுமே வைத்துள்ளார். ஏற்கனவே, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடாத குக் தற்போது டெஸ்ட் போட்டிக்கும் குட் பை சொல்லிவிட்டார். இந்தியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் குக் பெரிதாக ரன் எதுவும் அடிக்கவில்லை.
இந்த அறிவிப்பை வெளியிட்ட போது, “இது ஒரு சோகமான நாளாக இருந்தாலும், சிரித்த முகத்துடன் இதனை அறிவிக்கிறேன். என்னால் முடிந்தவற்றை கொடுத்துவிட்டேன். என்னிடம் கொடுக்க இனி எதுவும் இல்லை” என்று குக் உருக்கமாக பேசினார். 2006ம் ஆண்டு தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை இந்திய அணிக்கு எதிராக நாக்பூரில் தொடங்கிய குக், தற்போது அதே இந்திய அணிக்கு எதிராக தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கிரிக்கெட் அல்லாமல் விவசாயத்தில் குக் நாட்டம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.