அஜித் குமார் x
விளையாட்டு

'வெறும் 5 பயிற்சி செஷன்கள் தான்..' 14 ஆண்டுக்கு பிறகு அஜித்தின் பெஸ்ட்! ஐரோப்பிய ரேஸில் தகுதி!

துபாய் கார் ரேஸை முடித்தபிறகு போர்ச்சுக்கல்லில் நடைபெறும் ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் கார் ரேஸில் பங்கேற்றிருக்கும் அஜித் குமார், முதல் சுற்றில் தகுதிபெற்று அசத்தியுள்ளார்.

Rishan Vengai

குட் பேட் அக்லி, விடாமுயற்சி என இரண்டு படங்களில் நடித்துமுடித்த நடிகர் அஜித்குமார், துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் தனது ‘அஜித்குமார் ரேஸிங்’ அணியுடன் பங்கேற்றார். இதில் 24H சீரிஸ் கார் பந்தயத்தில் 3வது இடத்தை பிடித்த ’அஜித்குமார் ரேஸிங்’ அணி சாம்பியன்ஸிப் வென்று, பங்கேற்ற முதல் கார் பந்தய தொடரிலேயே சாதனை படைத்தது.

அஜித்குமார் ரேஸிங் அணி முதல் பங்கேற்பிலேயே 3வது இடத்தை பிடித்து சாதித்த நிலையில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என வாழ்த்துகளை பகிர்ந்திருந்தனர்.

ajith kumar racing

துபாய் ரேஸில் GT4 பிரிவில் மட்டும் ஓட்டுநராக பங்கேற்ற அஜித்குமார், பயிற்சி அமர்வில் ஏற்பட்ட விபத்திற்கு பிறகும் தன்னுடைய பெஸ்ட்டை கொடுத்திருந்தார்.

இந்நிலையில், துபாய் ரேஸை முடித்து போர்ச்சுக்கல்லுக்கு பயணப்பட்டிருக்கும் அஜித்குமார், அங்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடரில் பங்கேற்று முதல்சுற்றில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

5 பயிற்சி செஷன்களில் மட்டுமே பங்கேற்று சிறந்ததை கொடுத்த அஜித்..

துபாய் கார் பந்தயத்தை முடித்துவிட்டு போர்ச்சுக்கல்லில் நடைபெறும் 'தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025' ரேஸில் அஜித்குமார் ரேஸிங் அணி பங்கேற்றுள்ளார்.

இதில் போர்ஷே ஸ்ப்ரிண்ட் தொடரின் தகுதி சுற்றில் பங்கேற்ற அஜித்குமார், 4,653 கிமீ தூரம் கொண்ட சர்க்கியூட்டை 1.49 நிமிடத்தில் நிறைவு செய்து அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளார்.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கும் அஜித்குமார் ரேஸிங் அணி, அஜித்குமார் இந்த தொடரில் பங்கேற்பதற்கு முன்பு 5 பயிற்சி செஷன்களில் மட்டுமே பங்கேற்று, இதற்கு முந்தைய அஜித்தின் பெஸ்ட்டை உடைத்திருப்பதாக தெரிவித்துள்ளது. 2010-ல் கடைசியாக கார் ரேஸில் பங்கேற்றிருந்து நடிகர் அஜித்குமார், 14 வருடத்திற்கு பிறகு முதல்முறையாக கார் ரேஸில் பங்கேற்று தன்னுடைய முந்தைய ரெக்கார்டை உடைத்திருப்பது சாதனையாக பார்க்கப்படுகிறது.