ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரை வென்று வெற்றியுடன் வீடு திரும்பிய ரஹானேவுக்கு மலர் தூவி சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணி அடிலெய்டில் நடைபெற்ற ஆட்டத்தில் தோல்வியடைந்தது. அதன் பின்பு குழந்தை பிறப்புக்காக கோலி இந்தியா திரும்பினார். அதன்பின்பு நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டிகளுக்கும் ரஹானே கேப்டனாக செயல்பட்டார்.
இதனையடுத்து மெல்போர்ன் டெஸ்ட் போட்டியை இந்தியா அபாரமாக விளையாடி வெற்றிப்பெற்றது. அதன் பின்பு சிட்னி டெஸ்ட் போட்டியை டிரா செய்த இந்திய அணி, பிரிஸ்பேனில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றியது. இந்தியா தொடரை கைப்பற்றியதற்கு ரஹானேவின் பதற்றமில்லா தலைமைப் பண்பு காரணம் என புகழப்பட்டது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பினர் இந்திய வீரர்கள். அவர்களுக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதில் கேப்டன் ரஹானே மும்பையில் இருக்கும் தனது வீட்டுக்கு திரும்பினார். அவருக்கு ரசிகர்களும் அவரது உறவினர்களும் மலர்களை தூவி சிறப்பான வரவேற்பை அளித்தனர். அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட ரஹோனே அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார்.