விளையாட்டு

கோலியின் தவறை உணர்த்திய ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட்

rajakannan

அணி தேர்வில் கேப்டன் விராட் கோலி செய்த தவறுகளை ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட் போட்டி நிரூபித்துள்ளது. 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்துள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்தது. பந்துவீச்சில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் பேட்டிங்கில் வீரர்கள் சொதப்பினார்கள். இதற்கு பிட்ச் குறித்த சர்ச்சைகளும் காரணமாக பேசப்பட்டது. 

இருப்பினும், முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த உடனே இந்திய அணியில் வீரர்கள் தேர்வு குறித்து சில விமர்சனங்கள் எழுந்தது. டெஸ்ட் தொடர்களில் அதிக அனுபவம் இல்லாத ரோகித் சர்மாவை ஏன் எடுத்தார்கள் என்ற கேள்வி எழுந்தது. அதை விட ரஹானேவை ஏன் எடுக்கவில்லை என்ற விமர்சனமும் எழுந்தது. 

ஆனால், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அணி தேர்வு மீண்டும் விமர்சனத்திற்குள்ளானது. முதல் போட்டியில் ஆல் ரவுண்டராக கலக்கிய புவனேஷ்வர் குமாரை நீக்கினார் கோலி. அதேபோல், ரஹானேவை இரண்டாவது போட்டிக்கும் எடுக்கவில்லை. கே.எல்.ராகுல், இஷாந்த் சர்மா உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டனர். கோலியின் கணக்கு தப்பாக போக, இந்திய அணி இரண்டாவது டெஸ்டிலும் தோல்வி அடைந்தது. ரோகித் சர்மாவும் பெரிய அளவில் ரன் சேர்க்கவில்லை. இதனால், ரஹானேவை சேர்க்காதது விமர்சனத்திற்குள்ளானது. 

இதனையடுத்து, மூன்றாவது டெஸ்டில் புவனேஷ்வர் குமார் மீண்டும் சேர்க்கப்பட்டார். அதோடு ரஹானேவும் சேர்க்கப்பட்டார். ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ரஹானே 9 ரன்னில் ஆட்டமிழந்தாலும், இரண்டாவது இன்னிங்சில் 48 ரன்கள் எடுத்து அசத்தினார். அதேபோல், புவனேஷ்வர் குமார் பேட்டிங்கில் அசத்தினார். முதல் இன்னிங்சில் 30, இரண்டாவது இன்னிங்சில் 33 ரன்கள் எடுத்தார். அதேபோல், இரண்டு இன்னிங்சிலும் 4 விக்கெட்டுகள் எடுத்தார். 

ரஹானே, புவனேஷ்வர் குமார் தங்கள் திறமையை மூன்றாவது டெஸ்டில் நிரூபித்ததன் மூலம், கேப்டன் விராத் கோலியின் அணித் தேர்வு முடிவு தவறு என்பது நிரூபணமாகியுள்ளது.