விளையாட்டு

தோனிக்கு ஆதரவாக களத்தில் குதித்த சஞ்சய் பாங்கர்!

தோனிக்கு ஆதரவாக களத்தில் குதித்த சஞ்சய் பாங்கர்!

webteam

தோனிக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்துவரும் நிலையில் விராத் கோலியை அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளர் சஞ்சய் பாங்கரும் அவருக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 86 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 236 ரன்களுக்கே ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் யாரும் அரைசதம் கூட அடிக்கவில்லை. அதிகப்பட்சமாக சுரேஷ் ரெய்னா 46 ரன்களும், விராட் கோலி 45 ரன்களும் எடுத்திருந்தனர். இதன்மூலம் 3 ஒருநாள் போட்டி கொண்ட கிரிக்கெட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது. 

கடந்த போட்டியில் தோனி 59 பந்துகளை சந்தித்து 37 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். தோனி பொதுவாகவே, சிறப்பாக ஆட்டத்தை முடிப் பவர் என பெயரெடுத்தவர். ஆனால் முந்தைய போட்டியில் அவர் பொறுமையாக ஆடினார். அவரது ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள்  அதிருப்தி யை வெளிப்படுத்தினர். 

இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்திருந்த போது தோனி களமிறங்கினார். அப்போது, 23 ஓவர்களில் 183 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. இதுபோன்ற பல இக்கட்டான தருணங்களில் தோனி பல முறை பொறுப்புடன் விளையாடி இந்திய அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளார். இதற்கு 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஒரு எடுத்துக் காட்டாகும். ஆனால், இந்தப் போட்டியில் 59 பந்துகளை சந்தித்து வெறும் 37 ரன்கள் மட்டுமே அடித்தார்.

தோனியின் ஆட்டம் குறித்து பலரும் விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். தோனி 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கலை எட்டிய போதும், அதனையெல்லாம் விடுத்து ஏராளமானோர் அவரை வைத்து ட்ரோல் செய்தனர்.

தோனிக்கு ஆதரவாக கேப்டன் விராத் கோலி கூறும்போது, “தன்னுடைய வழக்கமான பாணியில் தோனி விளையாட முடியாமல் போகும் போதெல்லாம் இப்படியொரு விமர்சனம் எழுகிறது. சிறப்பாக விளையாடி வெற்றி பெற வைக்கும் பொழுது, அவரை சிறந்த பினிஷர் என்று போற்றி புகழ்கிறார்கள். அதேபோல், சிறப்பாக விளையாட முடியாத தருணங்களில் எல்லோரும் அவரை மட்டுமே குறி வைத்து தூற்றுகிறார் கள். விமர்சனம் செய்பவர்கள் இப்படி உடனடியாக ஒரு முடிவுக்கு வருவது துரதிருஷ்டவசமானது” என்றார்.

(சஞ்சய் பாங்கர்)

இந்நிலையில் இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் சஞ்சய் பங்கரும் தோனிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘’இந்திய அணி விக்கெட்டுகளை இழந்துகொண்டிருந்த நிலையில் தோனி நிலைத்து நின்றார். 40 ஓவர் வரை அவருக்கு சிறந்த பார்ட்னர்ஷிப் கிடைக்கவில்லை. அவர் அடித்து ஆடலாம் என்று நினைக்கையில் எதிர்முனையில் விக்கெட்டுகள் சரிந்துவிட்டது. முதலில் சுரேஷ் ரெய்னா, பிறகு ஹர்திக் பாண்ட்யா. இவர்களை அடுத்து தோனியுடன் ஆட பேட்ஸ்மேன் யாரும் இல்லை. கடைசிக்கட்டத்தில் விக்கெட்டுகள் விழுந்தால் அடித்து ஆடுவது கடினம். அதைதான் தோனி செய்தார். அதோடு இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். அடுத்த (இன்றைய) போட்டியில் மிடில் ஆர்டரில் வீரர்கள் நிலைத்து நின்று ஆட வேண்டும். ஆடுவார்கள் என்று நம்புகிறேன்’’ என்றார்.