விளையாட்டு

"இந்தியா-பாகிஸ்தான் போட்டியை இனி பார்க்கமாட்டேன்" தோனியின் ஓய்வால் ரசிகர் உருக்கம் !

"இந்தியா-பாகிஸ்தான் போட்டியை இனி பார்க்கமாட்டேன்" தோனியின் ஓய்வால் ரசிகர் உருக்கம் !

jagadeesh

தோனி ஓய்வுப் பெற்றுவிட்டதால் இனி நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டியை பார்க்கமாட்டேன் என்று பாகிஸ்தான் கிரிக்கெட்டின் ஆதரவாளரும் தோனியின் ரசிகருமான சிகாகோ சாச்சா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஆகஸ்ட் 15 ஆம் தேதி கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்தார். இதனையடுத்து பலதரப்பினரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். தோனியின் தீவிர ரசிகர்கள் கவலையில் மூழ்கியிருக்கின்றனர். தோனியின் தீவிர ரசிகரான சிகாகோ சாச்சா என்றழைக்கப்படும் முகமது பஷீர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆதரவாளர்.

பாகிஸ்தானின் கராச்சியை சேர்ந்த முகமது பஷீர், சிகாகோவில் வசித்து வருகிறார். உலகத்தில் எங்கு இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெற்றாலும் அங்கு பஷீர் கண்டிப்பாக இருப்பார். ஆனால் இவர் தோனியின் தீவிர ரசிகர். இப்போது தோனியின் ஓய்வுக் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் "தோனி இல்லாததால் இனி இந்தியா - பாகிஸ்தான் போட்டியை உலகில் எங்கு நடைபெற்றாலும் காண செல்லப்போவதில்லை" என்றார்.

மேலும் " ஒவ்வொரு வீரரின் பயணமும் ஒரு நாள் முடிவுக்கு வரும். ஆனால் தோனியின் ஓய்வு எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பெரிய அளவிலான போட்டியில் ஓய்வு அளித்திருக்க வேண்டும். கொரோனா பாதிப்புகள் முடிந்த பின்பு அவரை ராஞ்சியில் நிச்சயமாக தோனியை சந்திப்பேன் " என கூறியுள்ளார் சிகாகோ சாச்சா.