இந்திய அணியில் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். நீண்ட காலம் கேப்டனாக இருந்த தோனி 2014ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்தும், கடந்த ஆண்டு 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் கேப்டன் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றார். தன்னுடைய கேப்டன் பொறுப்பை அவர் விராட் கோலியிடம் ஒப்படைத்தார்.
விராட் கோலியிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்த போது, களத்திலும் பயிற்சியின் போதும் அவர் இரண்டாவது கேப்டனாகவே செயல்பட்டு வருகிறார். டெஸ்ட் போட்டியில் இருந்து தோனி ஓய்வு பெற்ற நிலையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இப்பொழுது விளையாடி வருகிறார். இந்தப் போட்டிகளின் போது இக்கட்டான நேரங்களில் விராட் கோலிக்கு தோனி ஆலோசனை கூறுவார். அதற்கு நல்ல பலன்களும் கிடைக்கும்.
விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படும் போதெல்லாம் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்படுவார். அப்போது, ரோகித் சர்மாவுக்கு தோனி ஆலோசனை கூறி வருகிறார். சில நேரங்களில் ரோகித்தை ஓரமாக இருக்க வைத்துவிட்டு தோனி கேப்டனாக செயல்படுவார்.
ரோகித் சர்மா கேப்டனாக இருக்கும் ஒவ்வொரு முறையும் தோனிக்கு ஸ்பெஷலாக ஏதோ ஒன்று செய்வார். விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்ற பின்னர் தொடர்ச்சியாக தோனி 7வது இடத்தில் களமிறங்கினார். அதனால், அவர் பேட்டிங் செய்ய போதுமான வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. ‘ஏன் கடைசி பேட்ஸ்மேனாக களமிறக்குங்களேன்’ என சில ரசிகர்கள் இது குறித்து விமர்சனங்களை முன் வைத்தனர்.
அந்த நேரத்தில்தான் டிசம்பரில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான தொடரில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்ட போது, தோனியை முன் வரிசையில் களமிறக்கினார். ரோகித் சர்மா ஆட்டமிழந்த போது, கேலரியில் ரவிசாஸ்திரிக்கு கையசைத்து தோனியை 3வது வீரராக களமிறக்க செய்தது அப்போது பேசப்பட்டது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோனியை மீண்டும் கேப்டன் ஆக்கி அழகு பார்த்துள்ளார் ரோகித் சர்மா. கேப்டன் ரோகித், துணைக் கேப்டன் ஷிகர் தவானுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஒருநாள் போட்டியை பொறுத்தவரை கேப்டனாக தோனிக்கு இது 200வது போட்டியாகும். நீண்ட நாட்களுக்கு பிறகு தோனியை களத்தில் கேப்டனாக பார்த்ததில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி.
விராட் கோலியை காட்டிலும் ரோகித் சர்மாவுக்கு தோனிக்கு மீது ஏன் இவ்வளவு பாசம் தெரியுமா?. இந்திய அணியில் உள்ள பல்வேறு வீரர்கள் தங்களது திறமையை சரியாக வெளிப்படுத்த காரணமாக திகழ்ந்தவர் முன்னாள் கேப்டன் தோனி. பின் வரிசையில் விளையாடிக் கொண்டிருந்த ரோகித் சர்மாவை தோனிதான் தொடக்க வீரராக களமிறக்கினார். அந்த வாய்ப்பை ரோகித் சரியாக பயன்படுத்திக் கொண்டார். ரோகித் சர்மாவின் வாழ்க்கை அதன்பிறகு முற்றிலும் மாறிவிட்டது. தற்போது இந்திய அணியில் சிறந்த தொடக்க வீரராக ரோகித் திகழ்ந்து வருகிறார்.
தன்னை தொடக்க வீரராக உயர்த்தி கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தி தந்ததற்கு நன்றி கடனுக்காக தோனிக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ரோகித் ஏதாவது செய்து வருகிறார். அந்த வகையில்தான் யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் தோனியை கேப்டனாக்கி விட்டார் ரோகித்.