காஷ்மீர் குறித்து ட்விட்டரில் சர்ச்சையான கருத்துகளை பதிவிட்ட பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித்
அஃப்ரிடிக்கு இந்திய வீரர்கள் பலரும் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
பாகிஸ்தான் நட்சத்திர கிரிக்கெட் வீரர் அஃப்ரிடி. 500 விக்கெட்டுகளும் பத்தாயிர ரன்களுக்கு மேல் எடுத்த வீரர்களின் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் காலிஸ்க்கு அடுத்த இரண்டாம் இடத்தில் இருப்பவர். செல்லமாக ‘பூம்பூம் அஃப்ரிடி’ என அழைக்கபடும் இவருக்கு பாகிஸ்தானில் மட்டுமல்லாமல் பல நாடுகளிலும் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளனர். மைதானத்தில் இவர் இருக்கும் வரை எதிர் அணி பந்து வீச்சாளர்களின் முகத்திலேயே பயம்தெரியும். குறைந்த பந்துகளை சந்தித்தாலும் அதில் பலமுறை எல்லைக் கோட்டை முத்தமிட்டு திரும்பும் இவரது பந்துகள். களத்தில் ஆக்ரோஷத்தை வெளிகாட்டும் இவர் பல முறை பல வீரர்களிடம் சண்டையிட்டு சர்ச்சையில் சிக்கியதும் உண்டு.
இவர் சர்வதேச போட்டியில் இருந்து ஒய்வு பெற்றுவிட்டாலும் உள்ளுரில் நடக்கும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விலையாடி வருகிறார். சமீபத்தில் பாகிஸ்தானில் நடந்த பிஎஸ்எல் போட்டியிலும் சிறப்பாகவே இவர் செயல்பட்டார். சமுக அக்கறையில் அதிகம் நாட்டம் கொண்ட அஃப்ரிடி பாகிஸ்தானில் பல்வேறு நலத்திட்டங்களை முன் எடுத்து வருகிறார். ஏன் தன்னுடைய சொந்த செலவில் கட்டிய மருத்துவமனையில் இலவசமாக மருத்துவம் பார்த்து வருகிறார். இந்த நிலையில்தான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் காஷ்மீர் குறித்து சர்ச்சையான கருத்தினை பதிவிட்டு சலசலப்பை உண்டாகி உள்ளார்.
பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு வரும்படி அப்படி என்னதான் அவர் சொல்லிவிட்டார் என கேட்பவர்களுக்கு எளிய விளக்கம். 'இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் வருத்தமளிக்கும் வகையிலும், அபாயகரமான வகையிலும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. சுய உரிமை மற்றும் சுதந்திரத்துக்காகப் போராட்டம் நடத்தி வருபவர்களின் குரலை ஒடுக்க அவர்கள் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிகழ்வுகளை தடுக்க ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஆச்சர்யமளிக்கிறது என்று அஃப்ரிடி பதிவிட்டிருந்தார்.
கவுதம் காம்பீர்:
இந்த ட்விட்டர் பதிவு பற்றி கருத்து தெரிவித்த தொடக்க வீரர் கவுதம் காம்பீர், அவர் ஐக்கிய நாடுகள் சபை (UN) குறித்து பேசுகிறார். அவரது அகராதியில் யு.என். என்பதற்கு அண்டர் நைண்டீன் (19 வயதிற்குட்பட்ட) என்பதே பொருள். ஊடகங்கள் இதுகுறித்துக் கவலைப்படத் தேவையில்லை. அஃப்ரிடி நோ பாலில் விக்கெட் வீழ்ந்ததைக் கொண்டாடுகிறார் என்று பதிலடி கொடுத்தார். மேலும் இந்த முக்கிய விசயம் பற்றி கருத்து தெரிவிக்க தவறாத இந்திய கேப்டன் கோலி ‘ஒரு சின்ன திருத்தம். அது என்ன இந்தியா ஆக்கரமித்துள்ள காஷ்மீர்? காஷ்மீர் இப்போதும் எப்போதும் இந்தியாவின் ஒரு அங்கம்தான்’ என எதிர்வினை ஆற்றியிருந்தார்.
கபில்தேவ்:
இது பற்றி இந்திய அணியின் முன்னால் வீரர் கபில்தேவிடம் கருத்து கேட்கபட்டது. அதற்கு “யார் அவர்...? ஏன் அவருக்கு எல்லாம் நாம் முக்கியதுவம் கொடுக்க வேண்டும்.? சில நபர்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது’ எனவும் காட்டமாக பதில் கொடுத்தார்.
சுரேஷ் ரெய்னா:
மேலும் இந்திய அணியின் மிடில் ஆடர் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னாவும் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். ‘காஷ்மீர், இந்தியாவின் ஒரு பகுதி. அது, எப்போதும் இந்தியாவின் ஒரு அங்கமாகவே இருக்கும். எங்கள் மூதாதையர்கள் பிறந்த புண்ணிய பூமி அது. எங்கள் காஷ்மீரில் தீவிரவாதம் மற்றும் ஆக்கிரமித்து போர் நடத்திவரும் பாகிஸ்தான் ராணுவத்திடம், அவற்றை நிறுத்துமாறு ஷாகித் அஃப்ரிடி சொல்லுவார் என்று நம்புகிறேன். நாங்கள் விரும்புவது வன்முறையை அல்ல; அமைதியை மட்டுமே’’என்று கூறியுள்ளார்.