விளையாட்டு

7 பந்தில் 7 சிக்சர்: அசத்திய ஆப்கான் வீரர்கள்

7 பந்தில் 7 சிக்சர்: அசத்திய ஆப்கான் வீரர்கள்

webteam

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி-20 போட்டியில் 7 பந்துகளில் 7 சிக்சர்களை விளாசி, ஆப்கானிஸ்தான் வீரர்கள் மிரட்டியுள்ளனர்.

ஜிம்பாப்வே, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு டி-20 கிரிக்கெட் தொடர் பங்களாதேஷில் நடந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை நடந்த லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகள் மோதின. 

முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 16 வது ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது களத்தில் முகமது நபியும் ஸட்ரனும் இருந்தனர். 17 வது ஓவரை ஜிம்பாப்வேயின் சடாரா வீசினார். முதல் இரண்டு பந்துகளில் தலா ஒரு ரன் எடுத்த இந்த ஜோடியில், மூன்றாவது பந்தை சிக்சருக்குத் தூக்கினார், நபி. நான்காவது பந்திலும் அதற்கடுத்த பந்திலும் சிக்சர் விளாசினார் நபி. அதோடு அந்த ஓவர் முடிந்தது. அந்த ஓவரில் மட்டும் 26 ரன்கள் கிடைத்தது. 

அடுத்த ஓவரில் எதிர்முனையில் இருந்த ஸட்ரன், அபியின் சிக்சர் மழையை தன் பங்குக்கு தொடர்ந்தார். 18 வது ஓவரை, நவில்லே மட்ஸிவா வீசினார். அவரது முதல் பந்தை மிட் விக்கெட் திசையில் தூக்கினார் ஸ்ட்ரான். பந்தை காணவில்லை. அடுத்த பந்தையும் அதே ஏரியாவில் சிக்சருக்கு அடித்தார். அதற்கடுத்த பந்தை பைன் லெக் திசையில் சிக்சராக விளாசினார். அதற்கடுத்த பந்து வைடாக அமைந்தது.

18 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து முகமது நபி ஆட்டமிழக்க, 30 பந்துகளில் 69 ரன்கள் விளாசினார் ஸ்ட்ரன். ஐந்தாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 107 ரன்கள் சேர்த்தது. இதனால் அந்த அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணியால், 7 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ஜிம்பாப்வே அணி, தோல்வியை தழுவியது.