விளையாட்டு

"ஆப்கானிஸ்தான் அணி நிச்சயம் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும்" - ஆப்கன் கிரிக்கெட் வாரியம்

jagadeesh

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி நிச்சயம் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஹமீத் ஷின்வாரி தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாடு மீண்டும் இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கமான தலிபான் கைகளில் சென்றுள்ளது. தலிபான்கள் ஆட்சியில் பல்வேறு விஷயங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். மேலும் அந்நாட்டில் இருக்கும் மிக முக்கியமான கிரிக்கெட் மைதானங்கள் அனைத்தும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டன. ஆப்கான் நாட்டில் நிலை குறித்து அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் ரஷீத் கானும், முகமது நபியும் தங்களது கவலைகளை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ஆப்கான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஹமீத் ஷின்வாரி "பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடரிலும், டி20 உலகக் கோப்பை போட்டியிலும் நிச்சயம் ஆப்கான் அணி பங்கேற்கும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. நாங்கள் பிசிசிஐ மற்றும் ஐசிசியுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். அவர்களும் ஆப்கான் நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதனால் கிரிக்கெட் விளையாடுவதில் இப்போதைக்கு எந்தப் பிரச்னையும் இல்லை" என்றார்.

மேலும் பேசிய அவர் "தலிபான்களுக்கு கிரிக்கெட் மீது எந்தப் பிரச்னையும் இல்லை என்றே நினைக்கிறேன். முன்பு அவர்கள் ஆட்சியில் இருந்தபோது கூட கிரிக்கெட்டை அவர்கள் தொந்தரவு செய்யவில்லை. கிரிக்கெட் விளையாடக் கூடாது என்றோ அவர்களால் விளையாட்டுக்கு பாதிப்பு ஏற்பட்ட சம்பவங்கள் முன்னதாக கூட நடந்தது இல்லை" என்றார் ஹமீத் ஷின்வாரி.