முகமது ஷமிக்கு இருக்கும் ஆயிரம் ரசிகைகளில் நானும் ஒருத்தி அவ்வளவு தான் என பாகிஸ்தானை சேர்ந்த அலிஷாப் கூறியுள்ளார்
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் முகமது ஷமி குறித்து அவரது மனைவி ஹசின் ஜஹான் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பிருப்பதாகவும் அவர்களுடன் தனிப்பட்ட முறையில் நேரம் செலவழிப்பதாகவும் அவர் தனது முகநூல் பக்கத்தில் ஆதாரங்களுடன் தெரிவித்தார். பெண்களின் புகைப்படங்கள் மற்றும் மொபைல் எண்களை அவர் பதிவிட்டார். மேலும் எனக்கு உண்மையாக இல்லாத ஷமி நாட்டுக்கும் உண்மையாக இல்லை. பாகிஸ்தானை சேர்ந்த அலிஷாப் என்ற பெண்ணிடம் பணம் வாங்கியுள்ளார். இங்கிலாந்தில் இருக்கும் முகமது பாயின் வலியுறுத்தலின் பேரில் அதைப் பெற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டார்.அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என்றார்.
இந்நிலையில் ஷமி மனைவியின் குற்றச்சாட்டுக்கு ஆளான அலிஷாப் தற்போது தனது மவுனத்தை கலைத்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக பேசிய அலிஷாப், ஷமிக்கு இருக்கும் ஏராளமான ரசிகர்களில் நானும் ஒருத்தி அவ்வளவு தான். இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடரும் லட்சம் ரசிகர்களில் நானும் ஒருத்தி. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. அப்போது ஒரு பாகிஸ்தான் ரசிகர் அவரிடம் ஏதோ சொன்னார், அதற்கு அவரும் பதிலளித்தார். இதனையடுத்து முகமது ஷமி யார் என்பதை நான் பார்க்க விரும்பினேன். நான் அவரது பக்கத்திற்கு சென்று அவரை சந்தித்தேன், அங்கிருந்து தான் எங்கள் இருவருக்கும் இடையே உரையாடல் தொடங்கியது என்றார்.
துபாயில் ஷமியை சந்தித்ததை ஒப்புக்கொண்ட அலிஷாப் இது ஒரு எதார்த்தமான சந்திப்பு என்றார். ஷார்ஜாவில் தங்கியிருக்கும் எனது சகோதரியை பார்க்க சென்ற போது தான் ஷமியை ஒரு ரசிகையாக சந்தித்தேன்.
ஷமிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து பேசுகையில், "முகமது பாயை தனிப்பட்ட முறையில் எனக்கு தெரியாது. அவருடன் எந்த தொடர்பும் இல்லை. எங்களுக்கு இடையே பணப்பரிவர்த்தனையும் இல்லை" என்று அவர் கூறினார். இதை எங்கு வந்து கூறவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.