விளையாட்டு

அயர்லாந்து- பங்களாதேஷ் மோதல்: ஷகிப் அல் ஹசன் காயம்!

அயர்லாந்து- பங்களாதேஷ் மோதல்: ஷகிப் அல் ஹசன் காயம்!

webteam

அயர்லாந்துக்கு எதிராக நேற்று நடந்த கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அயர்லாந்து, பங்களாதேஷ், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு, ஒருநாள் கிரிக்கெட் தொடர், அயர்லாந்தில் நடந்துவருகிறது. பங்களாதேஷ்- அயர்லாந்து அணிகள் நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் மோதின. முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி, 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 292 ரன் எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பால் ஸ்டிர்லிங் 130 ரன்னும் விக்கெட் கீப்பர் போர்டர்பீல்டு 94 ரன்னும் விளாசினர். பங்களாதேஷ் தரப்பில் அபு ஜயத் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். முகமது சைபுதீன் 2 விக்கெட்டும் ருபெல் ஹுசைன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 293 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பங்களாதேஷ் அணி, 43 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 294 ரன் விளாசி, வெற்றி பெற்றது. அந்த அணியின் தமிம் இக்பால் 57 ரன்னும் லிடன் தாஸ் 76 ரன்னும் ஷகிப் அல் ஹசன் 50 ரன்னும் விளாசினர். ஐந்து விக்கெட் வீழ்த்திய பங்களாதேஷ் அணியின் அபு ஜயத் ஆட்டநாயகன் விருது பெற்றார். நாளை நடக்கும் இறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டியின் போது சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ஷகிப் அல் ஹசன், 51 பந்தில் 50 ரன் சேர்த்தார். 36 வது ஓவரின் போது அவரது காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மைதானத்தில் சாய்ந்தார். பிசியோதெரபிஸ்ட் மைதானத்துக்குள் வந்து  சிகிச்சை அளித்தார். பிறகும் தொடர்ந்து வலி ஏற்பட்டதால் ரிடையர்ட் ஹர்ட் ஆகி, வெளியேறினார்.

இந்நிலையில், காயம் அதிமாகிவிடக் கூடாது என்பதற்காகவே ஷகிப் மைதானத்தில் இருந்து வெளியேறினார் என்றும் அவர் காயம் சரியாகிவிடும் என்று நம்புவதாகவும் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.