அபுதாபி கிராண்ட் பிரிக்ஸ் ஃபார்முலா 1 இறுதிப் போட்டியின் கடைசி லேப்பில் லூயிஸ் ஹாமில்டனை முந்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் (Max Verstappen). இந்த போட்டி ஆரம்பமானது முதலே ஹாமில்டன் முதலாவது வீரராக பந்தய தூரத்தை கடந்து லீட் எடுத்திருந்தார். ஆனால் கடைசியில் அவரை வீழ்த்திவிட்டார் வெர்ஸ்டாப்பன்.
இந்த போட்டியில் ஹாமில்டன் வென்றிருந்தால் ஃபார்முலா 1 ரேஸில் எட்டு முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்ற சாதனையை படைத்திருப்பார். இதன் மூலம் மைக்கேல் ஷூமேக்கரின் சாதனையை தகர்த்திருப்பார் அவர். ஆனால் அவரது அந்த கனவை தவிடு பொடியாக்கி உள்ளார் 24 வயதான வெர்ஸ்டாப்பன். இது அவர் வென்றுள்ள முதல் உலக சாம்பியன் பட்டமாகும்.
மொத்தம் 1 மணி நேரம், 30 நிமிடம், 17.345 நொடிகளில் வெர்ஸ்டாப்பன், அனைத்து லேப்புகளையும் முடித்து ஃபினிஷ் லைனை கடந்தார். ஹாமில்டனுக்கும், வெர்ஸ்டாப்பனுக்கும் வெறும் 2.256 நொடிகள் தான் வித்தியாசம்.