விளையாட்டு

“80 வயதானாலும் தோனி என் அணியில் ஆடுவார்”- டிவில்லியர்ஸ் நெகிழ்ச்சி

“80 வயதானாலும் தோனி என் அணியில் ஆடுவார்”- டிவில்லியர்ஸ் நெகிழ்ச்சி

rajakannan

தோனியைப் போன்ற ஒரு வீரரை அணியில் இருந்து நீக்க முடியுமா என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி ஆட்டக்காரருமான ஏபி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார். 

இந்திய அணியின் கேப்டன்களில் மிக முக்கியமான சாதனைகளை படைத்தவர் தோனி. பல்வேறு கோப்பைகளை வென்ற அவரது தலைமையிலான அணி வென்றுள்ளது. அதோடு, பேட்டிங்கிலும் ஒரு காலத்தில் இந்திய அணியில் மிடில் ஆர்டர் தூணாக இருந்தவர். தோல்வியின் விளிம்பில் இருந்த போட்டியை கூட தனது மேஜிக் பேட்டிங்கால் வெற்றி பெற செய்வார். விக்கெட் கீப்பில் கூட அவர் உலக அளவில் சிறந்த வீரராக உள்ளார். 

டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். சமீப காலமாக தனது மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. முக்கியமான தருணங்கள் அவர் பேட்டிங் முந்தைய நிலையில் இல்லை. அதனால் அவர் அணியில் இடம்பெற வேண்டுமா? வேண்டாமா? என்ற கேள்விகள் பலராலும் முன் வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தோனி அணியில் இடம்பெறுவது குறித்து ஏபி டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். ஏ.என்.ஐக்கு அவர் அளித்த பேட்டியில், “என்னுடைய அணியில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வருடமும் தோனி விளையாடுவார். 80 வயதில் சக்கர நாற்காலியில் இருக்கும் போது கூட அவர் என்னுடைய அணியில் விளையாடுவார். அவர் மிகவும் அற்புதமான மனிதர். அவரது சாதனைகளை பார்த்தாலே தெரியும். அவரைப் போன்ற வீரரை நீங்கள் இழக்க விரும்புவீர்களா?. நான் அப்படி செய்ய மாட்டேன்” என்றார்.

அதேபோல், விராட் கோலியை பற்றிய கூறிய டி வில்லியர்ஸ், “நாங்கள் இருவரும் ஒன்றாக பேட்டிங் செய்வதில் எங்களுக்கிடையே ஒருவித கெமிஸ்ட்ரி உள்ளது. விராட் கோலியுடன் பேட்டிங் செய்வது மிகவும் எளிது. பேட்டிங்கை மகிழ்ச்சிகரமாக செய்வதில் எங்கள் இருவருக்கும் ஒரேவிதமான மனநிலை உண்டு. நமது எண்ண ஓட்டங்களைப் புரிந்துகொண்ட ஒருவருடன் இணைந்து விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கக் கூடியது. கோலி அப்படிப்பட்ட ஒருவர். அவருக்கு ரொனால்டோவை மிகவும் பிடிக்கும். அதனால், அவர் ரொனால்டோ என்றால், நான் மெஸ்ஸி” என்றார்.