விளையாட்டு

சேஹல், குல்தீப் பிரமாதம். ஆனால்..? தென்னாப்பிரிக்க கோச் சந்தேகம்!

சேஹல், குல்தீப் பிரமாதம். ஆனால்..? தென்னாப்பிரிக்க கோச் சந்தேகம்!

webteam

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, தவான் மற்றும் விராத் கோலியை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஒட்டிஸ் கிப்சன் பாராட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு நாள் போட்டித் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் தென்னாப்பிரிக்க மண்ணில் ஒரு நாள் தொடரை வென்று சரித்திரம் படைத்துள்ளது. 

இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் ஓட்டிஸ் கிப்சன் கூறும்போது, ‘இந்திய அணி சிறப்பான வெற்றியை பெற்றிருக்கிறது. நிச்சயம் அதைப் பாராட்ட வேண்டும். இந்த தொடரில் அனைத்துப் போட்டியிலும் இந்தியாவின் டாப்-3 வீரர்களில் ஒருவர் சதம் அடித்திருக்கிறார்கள். எங்கள் அணியில் ஒரே ஒரு சதம் மட்டுமே அடிக்கப்பட்டிருக்கிறது. இந்த தொடரில் இதுதான் இரு அணிகளுக்கு இடையிலான வித்தியாசம். இந்த தோல்வி நிறைய பாடங்களை கற்றுத் தந்திருக்கிறது. இதுபோன்ற போட்டிகளில் இருந்து கிடைக்கும் அனுபவத்தின் மூலம் 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்குள் வலுவான அணியாக உருவெடுப்போம். 

இந்த தொடரில் இந்திய சுழல் பந்துவீச்சாளர் சேஹல், குல்தீப் சிறப்பாகச் செயல்பட்டார்கள். அவர்கள் உலகத்தரமான ஸ்பின்னர்கள். எந்த இடத்திலும் அவர்கள் சிறப்பாக பந்துவீசக் கூடியவர்கள். ஆனால், இங்கிலாந்தில் நடக்க இருக்கும் உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடுவார்கள் என்று நினைக்கவில்லை. அங்கு இதுபோன்று பந்து சுழலுமா என்பது சந்தேகம்தான்’ என்றார்.