கடந்த 2018-ம் ஆண்டு கேப் டவுனில் நடந்த தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பந்தை திட்டமிட்டு சேதப்படுத்திய சம்பவம் கிரிக்கெட் உலகை அதிரச் செய்தது. பந்தின் ஒரு பக்கத்தை சொரசொரப்பாக்கி ரிவர்ஸ் ஸ்விங்வரவழைக்க திட்டமிட்டு இளம் ஆஸ்திரேலிய வீரரான கேமரூன் பேன்கிராப்ட் (Cameron Bancroft), மஞ்சள் நிற உப்புத்தாளை (Sandpaper) பயன்படுத்தி பந்தை தேய்த்தார். இது கேமராவில் சிக்கிய நிலையில் அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தி பேன்கிராப்ட்க்கு 9 மாதங்கள் தடை, கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னருக்கு 12 மாதங்கள் கிரிக்கெட் ஆட தடைவிதிக்கப்பட்டது. அதே நேரம் பிற வீரர்கள் இதில் சம்மந்தப்படவில்லை என்று விடுவிக்கப்பட்டனர்.
இதனிடையே சமீபத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர் கவாஜா (khawaja ) வெளியிட்ட தனது 'சப்ர்' (Sabr) என்ற சுயசரிதை நூலில் இந்த சம்பவத்தில் முழு ஆஸ்திரேலியா அணியும் ஈடுபட்டது என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். பந்தை சேதப்படுத்திய விவகாரம் நாங்கள் அனைவரும் இணைந்து செய்தது என்றும் கூறியிருந்தார்.
இது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், " பந்தைச் சேதப்படுத்த ஒட்டுமொத்த அணியும் சேர்ந்து ஒரு பெரிய திட்டத்தை வகுத்தது என்பது முற்றிலும் அபத்தமானது. 2018-இல் நடந்த விசாரணையின் போது என்னிடம் கேள்விகள் கேட்கப்பட்டன, நான் நேர்மையாகப் பதிலளித்தேன்" என்று கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் (CA) தலைமைச் செயல் அதிகாரி டோட் கிரீன்பெர்க் (Todd Greenberg), 2018-இல் அணியில் இருந்த மற்ற வீரர்களின் வாக்குமூலங்களுக்கும் கவாஜாவின் புத்தகத்தில் உள்ள தகவல்களுக்கும் முரண்பாடு உள்ளதாகவும், அப்போதே விசாரணை முடிந்து விட்டதால், மீண்டும் விசாரணையை நடத்தமுடியாது என்றும் கூறினார்.
2018-ம் ஆண்டில் அணியில் இருந்த பந்துவீச்சாளர்களான கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட், லயன் ஆகியோர் பந்து சேதப்படுத்தப்பட்டது குறித்துத் தங்களுக்கு எதுவும் தெரியாது என ஆரம்பத்திலிருந்தே கூறி வரும் நிலையில், கவாஜாவின் குற்றச்சாட்டு அவர்களின் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்த நிலையில், அணியில் உள்ள இளம் வீரர்கள் சிலர் இந்த விவகாரத்தில் கவாஜாவின் கருத்து சரி என்ற நிலைப்பாட்டை கொண்டிருப்பதாகவும் இதனால், கவாஜாவின் கருத்தால் அணியில் உள்ள மூத்த வீரர்களுக்கும், தற்போது அணியில் உள்ள இளம் வீரர்களுக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.