விளையாட்டு

6000 தொழிலாளர்கள் பலி - கால்பந்து தொடரும், கத்தாரை சுழற்றியடிக்கும் சர்ச்சைகளும்

JustinDurai

உலகக்கோப்பை பணிகளுக்காக புலம்பெயர் தொழிலாளர்களை நடத்திய விதத்திற்காக கடும் விமர்சனத்திற்கு உள்ளானது கத்தார்.

2022இல் பிப்ஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான உரிமையை கத்தார், கடந்த 2010இல் பெற்றது. அன்று முதல் போட்டிகளை நடத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வந்தது.

புதிய நகரத்தையே உருவாக்கிய கத்தார்!

உலகக் கோப்பை போட்டியை நடத்துவதற்கென்றே ஒரு புதிய நகரத்தையே உருவாக்கியுள்ளனர். இதற்கான பணிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அதிலும் குறிப்பாக இந்தியா, வங்கதேசம், நேபாளம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் தான் அதிகமாக ஈடுபடுத்தப்பட்டனர்.

6 ஆயிரம் தொழிலாளர்கள் உயிரிழப்பு?

இதற்கு மத்தியில் புலம்பெயர் தொழிலாளர்களை நடத்திய விதத்திற்காக கடும் விமர்சனத்திற்கு உள்ளானது கத்தார். உலகக் கோப்பைக்கான பணிகள் கத்தாரில் தொடங்கப்பட்ட பிறகு இந்த பத்தாண்டு காலத்தில் மட்டும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக 'தி கார்டியன்' ஒரு அறிக்கையை வெளியிட்டது.

இவ்வளவு உயிரிழப்பு எதனால்?

கத்தாரில் நிலவும் கடுமையான வெப்பத்தில் தொடர்ந்து 12 மணி நேரம் வேலை செய்வது உள்ளிட்ட கடுமையான வேலைப்பளு காரணமாக தொழிலாளர்கள் மரணிக்கக் காரணமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த தொழிலாளர்களின் இறப்புக்கான காரணமாக 'இயற்கை மரணம்' என்றே பதிவு செய்யப்பட்டதாகவும், மேலும் இந்தக் எண்ணிக்கை குறைத்துக் காட்டப்பட்டுள்ளதாகவும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூறுகிறது.

கத்தாரில் உலகக்கோப்பை நடத்த எதிர்ப்பு

இதன் காரணமாக கத்தார் நாட்டில் கால்பந்து உலகக்கோப்பை தொடரை நடத்துவதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. கத்தாரை போட்டி நடத்தும் நாடாகத் தேர்வு செய்தது தவறு என்று முன்னாள் பிஃபாஃ தலைவர் செப் பிளாட்டர் தெரிவித்தார். கத்தார் அரசு தன்பாலின விவகாரத்தில் காட்டும் கடுமையான எதிர்ப்பு மற்றும் மைதான கட்டமைப்பு பணிகளில் தொழிலாளர்கள் நிலை குறித்து எழுந்த குற்றச்சாட்டுகள் ஆகியவை காரணமாக இந்த எதிர்ப்புகள் கிளம்பின.

இந்த நிலையில் உலகக் கோப்பை மைதானத்தை கட்டிய ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் புகைப்படங்களை கொண்டு உருவாக்கப்பட்ட மொசைக் ஆர்ட் பேனர், லுசைல் மைதான வாயிலில் வைக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களை நடத்திய விதத்திற்காக கத்தார் நாடு கடும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், இந்த பேனர் வைக்கப்பட்டிருக்கிறது.

தொடங்கிய கத்தார் உலகக்கோப்பை!

இருப்பினும், கோலாகலமாக கலை நிகழ்ச்சிகளுடன் கத்தாரில் உலகக்கோப்பை கால்பாந்து தொடர் தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் கத்தார் - ஈகுவடார் அணிகள் மோத உள்ளன. தொடக்க விழா நடைபெற்ற அல் ரயான் நகரில் உள்ள அல் பயத் அரங்கில் தான் இந்தப் போட்டி  நடைபெறுகிறது.