நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
புனேவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ்வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து அணியில், நிகோல்ஸ்(42), கிரண்ட் ஹோம்மி(41), லாதம்ஸ்(38) ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் புவனேஷ்குமார் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். பும்ரா மற்றும் சாஹல் தலா 2 விக்கெட்டுக்களை எடுத்தனர்.
231 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாட இந்திய அணியில் ரோகித் சர்மா(7), கேப்டன் கோலி(29) ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் ஷிகர் தவான் மற்றும் தினேஷ் கார்த்திக் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தனர். தவான் 68 ரன்களில் ஆட்டமிழக்க, 5-வது வீரராக ஹர்திக் பாண்டே 30 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியில், இந்திய அணி 46 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தினேஷ் கார்த்திக் 64 ரன்களுடனும், தோனி 18 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. முன்னதாக மும்பையில் நடைபெற்ற முதலாவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அக்டோபர் 29-ம் தேதி கான்பூரில் நடைபெறவுள்ளது.