ரஷ்யா அருகே உள்ள பிலோரஸ் நாட்டில் நடைபெற்ற 4வது உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி 3ஆம் இடம்பிடித்தது.
4வது வலைபந்து உலக கோப்பைக்கான போட்டிகள் ரஷ்யா அருகே உள்ள பிலோரஸ் நாட்டில் நடைபெற்றது. இப்போட்டிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா, சவுத் ஆப்ரிகா, ஜெர்மன், ரஷியா, பிலோரஸ், யு.எஸ்.ஏ, கென்னியா உட்பட 9 நாடுகள் பங்கேற்றன. இதில் முதல் இடத்தை வென்ற ஜெர்மனி நாட்டுக்கு தங்கமும், இரண்டாம் இடத்தை பிடித்த தென்னாப்ரிகாவுக்கு வெள்ளியும், மூன்றாம் இடத்தை பிடித்த இந்தியா அணிக்கு வெண்கலம் வழங்கப்பட்டது.
இப்போட்டிகளில் கலந்து கொள்ள இந்தியா அணி சார்பில் 6 ஆண், 6 பெண் விளையாட்டு வீரர்கள் மற்றும் 1 பயிற்சியாளர் சென்று இருந்தனர். இதில் அறிவழகன் மற்றும் திருஞானம் ஆகிய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் முரளி ஆகியோர் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள்.
இவர்கள் இந்தியா நாட்டிற்காக வலைபந்து விளையாட்டில் கலந்து கொண்டு வெண்கலம் வென்று தாய் நாடு திரும்பியுள்ளனர். இவர்களை வாணியம்பாடி ரயில் நிலையத்தில் கிராமமக்கள் மற்றும் இளைஞர்கள் மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும் உற்சாகத்துடன் வரவேற்றனர்.