இலங்கை அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை அணி படுதோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் இலங்கை அணியின் பொறுப்பு கேப்டனும் வேகப் பந்துவீச்சாளருமான மலிங்கா 300 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 300 விக்கெட் சாதனையை படைத்த 4-வது இலங்கை வீரர் என்ற பெருமையை இவர் பெற்றார். முதல் 3 இடங்களில், முரளிதரன் (534), வாஸ் (400), ஜெயசூர்யா (323) ஆகியார் உள்ளனர்.
தோல்விக்குப் பின் மலிங்கா கூறும்போது, ’300 விக்கெட் எடுத்ததில் மகிழ்ச்சி. அது வெறும் எண்ணிக்கைதான். ஆனால் போட்டியில் தோற்றது துரதிருஷ்டமானது. கடந்த 5 போட்டிகளில் நாங்கள் 250 ரன்களை கூட தொடவில்லை. இளம் வீரர்கள் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும். அவர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள். ஆனால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவர்களுக்கு அனுபவம் தேவையாக இருக்கிறது. அடுத்த சில மாதங்களில் அவர்கள் சிறப்பாக ஆடுவார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.