விளையாட்டு

தடைகளை தகர்த்த ‘சென்னை சீனியர் கிங்ஸ்’ - சிஎஸ்கேவின் மறக்க முடியாத நாள் !

rajakannan

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்று மறக்க முடியாத நாள். இதே நாளில்தான் ஹைதராபாத் அணியை வீழ்த்தி 2018 ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே அசத்தலாக வென்றது. இந்த வெற்றி சென்னை அணிக்கு சாதாரணமானது அல்ல. ஏனென்றால் இரண்டு வருட தடைக்குப் பின்னர் மீண்டும் விளையாடிய அந்த அணி, கோப்பையையும் கைப்பற்றியது. 

2018 ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு தொடக்கமே கடும் விமர்சனங்களுடன்தான் அமைந்தது. ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணியில் 30 வயதை கடந்த வீரர்கள் பெரும்பாலும் ஏலம் எடுக்கப்பட்டனர். சென்னை அணியில் தோனி உள்ளிட்ட பெரும்பாலான வீரர்கள் 30 வயதை கடந்தவர்கள். கடந்த ஆண்டு நிலவரப்படி அதிகப்படியாக இம்ரான் தஹிருக்கு 38 வயது.

 ஹர்பஜன் சிங் (37), தோனி (36) வாட்சன் (36), பிராவோ (34), டு பிளிசிஸ் (33), கேதர் ஜாதவ் (32), ரெய்னா (31), அம்பத்தி ராயுடு (32). ஆகவே இது சென்னை சூப்பர் கிங்ஸ் இல்லை சென்னை சீனியர் கிங்ஸ் என மீம்ஸ்கள் பறந்தன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உள்ளூர் வீரர் அஸ்வின் எடுக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக ஹர்பஜன் சிங் எடுக்கப்பட்டிருந்தார். அதனால், சற்றே அணி மீது அதிருப்தி இருந்தது. 

ஆனால், எல்லா விமர்சனங்களையும் தவிடுபொடியாக்கும் வகையில் சென்னை அணியின் ஆட்டம் கடந்த முறை இருந்தது. சென்னை அணியில் அம்பத்தி ராயுடு மிகவும் அபாரமாக விளையாடினார். அதேபோல் தான், வாட்சனும் தன்னுடைய பங்களிப்பை சிறப்பாக ஆற்றினார். அம்பத்தி ராயுடு (602), வாட்சன் (555) ரன்கள் சேர்த்தனர். கடந்த ஐபிஎல் தொடரில் தோனியின் ஆட்டம் மிகவும் மிரட்டலாக இருந்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பில் அவர் சிக்ஸர் மழை பொழிந்தார். தோனி ஓய்வு பெறுவார் என்ற பேச்சு அடிப்படை நிலையில், அவரது ஆட்டம் அதற்குப் பதிலடியாக அமைந்தது.

மிகவும் அசத்தலாக விளையாடி சென்னை அணி இறுதிப் போட்டிக்கு சென்றது. கடந்த ஆண்டு இதே நாளில்தான் இறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. 179 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியில் ஒன் மேன் ஆர்மியாக வாட்சன் வெளுத்து வாங்கினார். ரெய்னா 32 ரன்கள் எடுத்து சிறிது நேரம் ஒத்துழைப்பு தந்தார். இறுதியில் சென்னை அணி 18.3 ஓவர்களிலேயே 181 ரன்கள் குவித்து வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. வாட்சன் 57 பந்துகளில் 8 சிக்ஸர், 11 பவுண்டரிகள் உட்பட 117 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்தத் தொடரில் தோனி தொடர்ச்சியாக அதிரடி காட்டி வந்தார். அவருக்கு வேலை வைக்காமல் வாட்சனை போட்டியை முடித்துக் கொடுத்தார். 

சென்னை சீனியர் கிங்ஸ், இரண்டு ஆண்டு தடை என்ற விமர்சனங்களை எல்லாம் தவிடுபொடியாக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது முறையாக இதே நாளில் ஐபிஎல் கோப்பையை வென்றது.