விளையாட்டு

ரஞ்சி கிரிக்கெட்: அறிமுகப் போட்டியில் இரட்டை சதம் விளாசிய சுவேத் பார்கர்

ரஞ்சி கிரிக்கெட்: அறிமுகப் போட்டியில் இரட்டை சதம் விளாசிய சுவேத் பார்கர்

JustinDurai

முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக வீரராக களமிறங்கி அதிக ரன் எடுத்த 5-வது வீரர் என்ற பெருமையை பெற்றார் சுவேத் பார்கர்.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் காலிறுதி ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஆட்டம் ஒன்றில் மும்பை அணி, உத்தரகாண்டை சந்தித்தது. முதலில் பேட் செய்த மும்பை அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 304 ரன்கள் எடுத்திருந்தது.  அறிமுக வீரராக களம் கண்ட சுவேத் பார்கர் 104 ரன்களுடனும், சர்ப்ராஸ் கான் 69 ரன்களுடனும் நேற்று 2வது நாள் ஆட்டத்தை தொடங்கினர்.

அபாரமாக விளையாடிய இந்த இணை 4வது விக்கெட்டுக்கு 267 ரன் குவித்தது. சர்பராஸ் 153 ரன் விளாசி (205 பந்து, 14 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டமிழந்தார். நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுவேத் பார்கர் இரட்டை சதம் விளாசி அசத்தினார். அவர் 252 ரன் (447 பந்து, 21 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ரன் அவுட் ஆனார். இதன் மூலம் ஒட்டுமொத்த முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அறிமுக வீரராக களமிறங்கி அதிக ரன் எடுத்த 5-வது வீரர் என்ற பெருமையை 21 வயதான சுவேத் பார்கர் பெற்றார்.  முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அறிமுக வீரராக களமிறங்கி அதிக ரன் எடுத்த வீரர்களின் வரிசையில் பீகாரை சேர்ந்த சகிபுல் கனி 341 ரன்களுடன் முதலிடத்திலும், 2-வது இடத்தில்  அஜய் ரோஹரா (267*), 3-வது இடத்தில் அமோல் முஸும்தார் (260) 4-வது இடத்தில் பஹிர் ஷா (256*) ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை 8 விக்கெட் இழப்புக்கு 647 ரன்கள் (166.4 ஓவர்) குவித்து முதல் இன்னிங்சை 'டிக்ளேர்' செய்தது. இதையடுத்து பேட்டிங் தொடங்கிய உத்தரகாண்ட் அணி 2ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 39 ரன் எடுத்து திணறி வருகிறது.  இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

இதையும் படிக்கலாம்: பாரா துப்பாக்கி சுடுதல்: இந்தியாவின் அவனி லெகாரா தங்கப் பதக்கம் வென்று சாதனை