விளையாட்டு

உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று: நெருக்கடியுடன் களமிறங்கும் இத்தாலி

webteam

ரஷ்யாவில் அடுத்தாண்டு நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஸ்வீடனுக்கு எதிரான போட்டியில் நெருக்கடியுடன் இத்தாலி அணி களமிறங்குகிறது.

ரஷ்யாவில் அடுத்தாண்டு நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்றில் ஸ்வீடன் அணியுடனான போட்டிக்காக இத்தாலி அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான பிளே ஆஃப் சுற்றின் முதல் லெக் ஆட்டத்தில் ஸ்வீடன் அணி ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் சொந்த மைதானத்தில் அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியுடன் இத்தாலி அணி களமிறங்குகிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி ‌இன்று நள்ளிரவு நடைபெறுகிறது.

மற்றொரு, உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்றில், டென்மார்க் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் லெக் ஆட்டம் சமனில் முடிவடைந்தது. கோபன்ஹேகன் நகரில் நடைபெற்ற பிளே ஆஃப் சுற்று ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இவ்விரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது லெக் ஆட்டம் நாளை மறுதினம் அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெறுகிறது.

ரஷ்யாவில் அடுத்தாண்டு நடைபெறும் உலகக்கோப்பை போட்டிக்கு சுவிட்சர்லாந்து அணி தகுதிபெற்றது. வடக்கு அயர்லாந்து அணிக்கு எதிரான ப்ளே ஆஃப் சுற்றின் இரண்டாவது லெக் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணி சமன் செய்தது. சுவிட்சர்லாந்தின் BASEL நகரில் நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. முதல் லெக் ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்ததால், சுவிட்சர்லாந்து அணி உலகக்கோப்பை போட்டிக்கு தகுதிபெற்றது. முதன்முறையாக உலகக்கோப்பை போட்டிக்கு தகுதிபெற வேண்டும் என்ற உந்துதலுடன் இருந்த வடக்கு அயர்லாந்து அணியின் கனவு பறிபோனது.

உலகக்கோப்பை தகுதிச்சுற்றில், ஹோண்டுராஸ் அணிக்கு எதிரான இரண்டாவது லெக் ஆட்டத்தில் தாம் விளையாடுவது கடினம் என்று ஆஸ்திரேலிய கால்பந்து அணியின் கேப்டன் டிக் கேஹில் தெரிவித்துள்ளார். காயத்தால் அவதிப்பட்டு பட்டு வரும் நிலையில், போட்டிக்கு முன் முழு உடற்தகுதியை எட்டுவது சாத்தியமற்றது என அவர் கூறியுள்ளார். முதல் லெக் ஆட்டம் சமனில் முடிந்துள்ள நிலையில், இரண்டாவது லெக் ஆட்டம் ஹோண்டுராஸில் நாளை மறுதினம் நடைபெறுகிறது.