விளையாட்டு

2011 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் "மேட்ச் பிக்சிங்" ? - விசாரணையை தொடங்கிய இலங்கை !

jagadeesh

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் மேட்ச் பிக்சிங் செய்யப்பட்டதாகப் புகார் எழுந்ததையடுத்து விரிவான விசாரணைக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

2011 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்தியா, இலங்கையை வீழ்த்தி இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்றது. இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு கேப்டனாக தோனியும், இலங்கைக்கு கேப்டனாக சங்கக்காராவும் செயல்பட்டார்கள். இந்திய ரசிகர்களால் இந்த வெற்றி இப்போதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டியளித்து இலங்கை முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தநந்தா, "2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டி ஃபிக்ஸ் செய்யப்பட்டது. நான் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தபோதே இது குறித்துத் தெரிவித்து விட்டேன். அந்தப் போட்டியை நம்மால் சுலபமாக வென்றிருக்க முடியும். அந்த மேட்ச் ஃபிக்ஸிங்கில் எந்த வீரர்களும் சம்பந்தப்படவில்லை. ஆனால் சில தரப்புகள் முடிவு அப்படித்தான் வர வேண்டும் என்று ஃபிக்ஸ் செய்தன" எனக் கூறினார்.

அவரது இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து இலங்கை அணியின் கேப்டனாக இருந்த குமார சங்கக்காரா "இப்படி வேண்டுமென்றே குற்றச்சாட்டு மட்டும் வைக்கக் கூடாது. ஆதாரங்கள் இருந்தால் அதை ஐசிசி-யிடம் எடுத்துச் செல்ல வேண்டும். அப்போதுதான் முறையான விசாரணை மேற்கொள்ளப்படும்" என்றார். அந்தப் போட்டியில் சதம் அடித்த இலங்கை அணியின் ஜெயவர்தனாவும் " தேர்தல் வர உள்ளது. அதனால்தான் இப்படியெல்லாம் சொல்லப்படுகிறது. ஆதாரம் எங்கே?' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனாலும் இலங்கையின் விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் டுலாஸ் அலாகப்பெருமா மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். மேலும் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை தன்னிடம் விசாரணை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.