விளையாட்டு

சதம் விளாசினார் ரோகித் சர்மா - இந்திய அணிபோராடி தோல்வி

சதம் விளாசினார் ரோகித் சர்மா - இந்திய அணிபோராடி தோல்வி

rajakannan

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா சதம் அடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணி, அடுத்து, ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி, சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ்வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து, 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன் குவித்தது. அந்த அணியில், ஹேண்ட்கோம்ப் 73, கவாஜா 59, மார்ஸ் 54 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் குல்தீப், புவனேஸ்வர் குமார் தலா இரண்டு விக்கெட் சாய்த்தனர். 

289 ரன் என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 4 ரன் எடுப்பதற்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. தவான், ராயுடு டக் அவுட் ஆக, கேப்டன் விராட் கோலி 3 ரன்னில் ஏமாற்றினார். இதனையடுத்து, ரோகித் சர்மாவும், தோனியும் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். தோனி நிதானமாக விளையாட, ரோகித் சற்றே அடித்து விளையாடி ரன்களை சேர்த்தார். இந்திய அணி 25.2 ஓவரில் 100 ரன்களை எட்டியது. 

93 பந்தில் அரைசதம் அடித்த தோனி, 51 ரன்னில் அவுட் ஆனார். அப்போது இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 141 ரன் எடுத்திருந்தது. அடுத்து வந்த தினேஷ் கார்த்திக்கும் 12 ரன்னில் நடையைக் கட்டினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 110 பந்தில் சதம் விளாசினார். 42.3 ஓவரில் இந்திய அணி 200 ரன்களை எட்டியது. வெற்றி பெற இன்னும் 6 ஓவர்களில் 76 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. சதம் அடித்த உடன் ரோகித் சிக்ஸரும், பவுண்டரியுமான விளாசினார். இருப்பினும் 129 பந்தில் 133 ரன் அவுட் ஆனார். இந்திய அணி வெற்றி பெற  இறுதிவரை போராடியது. இருப்பினும், 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பு 254 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலியா 34 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ரோகித் சர்மாவுக்கு இது 22வது சதம் ஆகும். இந்திய அணியில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் கங்குலியுடன் மூன்றாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். சர்வதேச அளவில் 12வது இடத்தில் உள்ளார். சச்சின் 49, விராட் கோலி 38 சதங்களுடன் முன்னிலையில் உள்ளனர்.