நடப்பு தொடரில் அதிக கேட்ச்களை விட்ட அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திகழ்கிறது.
நடப்பு ஐபிஎல் சீசன் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், நேற்றுடன் 46 ஆட்டங்கள் முடிந்து விட்டன. நேற்று நடந்த 46வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனினும் இந்த ஆட்டத்தில் சென்னை அணியினர் பல கேட்ச் வாய்ப்புகளை வீணடித்தனர்.
அபிஷேக் அடித்த சுலபமான கேட்சை முகேஷ் சவுத்ரி தவறவிட்டார். அடுத்து மதீஷ் தீக்ஷனா, டுவைன் பிரடோரியஸும் கடைசி கட்டத்தில் நிகோலஸ் பூரனின் கேட்சை தவறவிட்டனர். கேன் வில்லியம்சன் பேட்டிங் செய்தபோது பந்தானது பேட்டில் உரசி விக்கெட் கீப்பரும், கேப்டனுமான தோனியிடம் சென்றது. எளிதான அந்த கேட்சை தோனி பிடிக்காமல் தவறவிட்டார். இதனால், சென்னை அணி வெற்றி வாய்ப்பை இழக்கும் நிலைக்கு சென்று, இறுதியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக கேட்ச்களை கோட்டைவிட்ட அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடத்தில் உள்ளது. இதுவரை 19 கேட்ச்களை நழுவவிட்டிருக்கிறது சிஎஸ்கே. இதற்காக சில வெற்றிகளையும் தாரைவார்த்திருக்கிறது. இந்த வகையில் 2-வது இடத்தில் டெல்லி, குஜராத் அணிகள் தலா 15 கேட்ச்களை தவற விட்டுள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அடுத்த லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது. இப்போட்டி நாளை மறுநாள் (மே 4) இரவு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக 'கேட்ச்' (11 கேட்ச்) செய்த ஃபீல்டர்களில் ராஜஸ்தான் அணி வீரர் ரியான் பராக் முதலிடத்தில் உள்ளார்.
இதையும் படிக்க: 99 (57) - ருத்துராஜின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் இதுதான்..! ஏன் தெரியுமா?