விளையாட்டு

பாண்ட்யா - ஜடேஜா கூட்டணியால் கரை சேர்ந்த இந்தியா : ஆஸிக்கு 303 ரன்கள் இலக்கு

பாண்ட்யா - ஜடேஜா கூட்டணியால் கரை சேர்ந்த இந்தியா : ஆஸிக்கு 303 ரன்கள் இலக்கு

EllusamyKarthik

இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று கான்பரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். 

மயங்க் அகர்வால், ஷமி, சாஹல் மற்றும் சைனிக்கு மாற்றாக சுப்மன் கில், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ் மற்றும் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தனர். தவானும், கில்லும் இந்தியாவுக்காக இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். பெரிய பார்ட்னர்ஷிப் அமைப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில் தவான் 16 ரன்களில் விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து வந்த கோலியுடன் இணைந்து கில் நிதானமாக விளையாடினார். இருப்பினும் 56 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் கில் 33 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

கேப்டன் கோலி பொறுப்போடு விளையாடி 63 ரன்களுக்கு அவுட்டானார். தொடர்ந்து வந்த ஷ்ரேயஸும், கே.எல்.ராகுலும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். 152 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இந்தியா இழந்த நிலையில் பாண்ட்யாவும், ஜடேஜாவும் 100 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 

பாண்ட்யா 92 ரன்களும், ஜடேஜா 66 ரன்களும் குவித்தனர். 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்களை குவித்தது இந்தியா. 

ஆஸ்திரேலியாவுக்காக சுழற்பந்து வீச்சாளர்கள் ஆஷ்டன் அகர் மற்றும் ஆடம் சாம்பா சிறப்பாக பந்து வீசி இருந்தனர். பத்து ஓவர்கள் வீசி ஓவருக்கு 4.5 ரன்களுக்கு கீழ் மட்டுமே ரன்களை கொடுத்து இந்திய பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தி, விக்கெட்டையும் வீழ்த்தினர்.