விளையாட்டு

ஒரே ஓவரில் ஆறு சிக்சர்கள் - 15 வருட சாதனையை மகனுடன் கொண்டாடிய யுவராஜ் சிங்

JustinDurai

ஒரே ஓவரில் ஆறு சிக்சர்கள் விளாசி யுவராஜ் சிங் சாதனை செய்து இன்றோடு 15 வருடமாகி விட்டது.

கடந்த 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் நடந்தது. 19 செப்டம்பர் 2007 அன்று இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடிக்கொண்டிருந்தது இந்தியா. மிடில் ஆர்டரில் களமிறங்கினார் யுவராஜ் சிங். இங்கிலாந்து ஆல் ரவுண்டர் ஃபிளிண்டாப் பந்துவீச்சில் யுவராஜ் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசினார் . கோபமான அவர், யுவராஜை ஏதோ திட்ட, கடுப்பாகிவிட்டார் யுவி. அடுத்த ஓவரை ஸ்டூவர்ட் பிராட் வீசினார். ஃபிளிண்டாப் மீதான கோபத்தை, பிராட் பந்திடம் காண்பிக்க ஆரம்பித்தார் யுவி.

ஒவ்வொரு பந்தையும் அவர் சிக்சருக்கு விரட்ட, சிலிர்த்தனர் ரசிகர்கள். ஆறு பந்துகளையும் சிக்சருக்கு பறக்கவிட்டு அசத்திய யுவிக்கு ஏராளமான பாராட்டுகள். ஆனால் நொந்து போனார் இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட். யுவராஜ், ஃபிளிண்டாப், பிராட் ஆகியோருக்கு மறக்க முடியாத போட்டியாக அமைந்துவிட்டது அது. தவிர, 12 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்த யுவராஜ் அதிவேக அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார். யுவராஜின் இந்த அசாத்திய ஆட்டத்தால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 218 ரன்களை சேர்த்து, இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்த போட்டி நடந்து இன்றோடு சரியாக 15 வருடம் ஆகிவிட்டது.

இந்த சாதனையின் 15 ஆண்டுகள் நிறைவையொட்டி யுவராஜ் சிங், தனது மகன் ஓரியனுடன் இணைந்து உற்சாகமாக கொண்டாடினார். இதனை ட்விட்டரில் பதிவிட்ட  யுவராஜ் சிங், "15 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றாக இதைப் பார்க்க இதைவிட ஒரு சிறந்த பாட்னரை கண்டுபிடித்திருக்க முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: முதல் பரிசு வழங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின்